“Exam எழுத விடமாட்டேன்” - மாணவிக்கு பாலியல் தொல்லை! தாய், மகளிடம் அத்துமீற முயன்ற.. பயிற்சியாளர் கைது!

கடந்த 3 ஆண்டுகளாக ஜெயராம் தகாத முறையில் பேசி பாலியல் ரீதியாக வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது
pocso
Published on: 
Updated on: 
1 min read

15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சூளகிரி கல்வித்துறை பயிற்சியாளர் மீது ஓசூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த பெத்த ஏலசகிரி மகேஷ் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராம் (52). இவர் சூளகிரி பகுதியில் கல்வித்துறையில் பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 7 ஆண்டுகளாக குடும்பத்துடன் அப்பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த திருமணமான பெண்ணிடம் கடந்த 3 ஆண்டுகளாக ஜெயராம் தகாத முறையில் பேசி பாலியல் ரீதியாக வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அப்பெண்ணின் 15 வயது மகளிடமும் ஜெயராம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

மேலும், தனது விருப்பத்திற்கு இணங்காவிட்டால் பள்ளியில் தேர்வு எழுத விடாமல் தடுத்து விடுவதாகவும், சிறுமியின் சகோதரனை 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விடாமல் செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார். ​இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி, நடந்த விவரங்களை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உடனடியாகப் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்திய மகளிர் போலீசார், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக கல்வித்துறை பயிற்சியாளர் ஜெயராம் மீது போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய கல்வித்துறை பயிற்சியாளர், 15 வயது மாணவியிடம் தவறாக நடந்து கொண்டது பெற்றோருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் குறித்து புகார் அளிக்க 1098 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். 

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com