

சிங்கப்பூரில் வசித்துவந்த தென் கொரியாவைச் சேர்ந்த நபர் ஒருவர், காதலிக்கும் போது தனது முன்னாள் காதலியுடன் நிர்வாணமாக வீடியோ காலில் உரையாடியதை ரகசியமாகப் பதிவு செய்து வந்துள்ளார். ஆனால் பின்னாளில் அவரது புதிய காதலியால் இந்த குற்ற சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
(பாதுகாப்பு காரணங்கள் கருதி இந்த குற்ற சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை)
பாதிக்கப்பட்ட 45 வயது கொரியப் பெண், டிண்டர் செயலியின் மூலம்தான் முதல் முதலில் அந்த நபரைச் சந்தித்துள்ளார். 2022-ம் ஆண்டு முதல் அவர்கள் நெருங்கி பழகத் தொடங்கியுள்ளனர். காதலிக்கும் சமயத்தில் அவர்கள் இருவரும் வெவ்வேறு நாடுகளில் இருந்ததால், வீடியோ கால் மூலமே அவர்களது அழைப்புகள் இருந்துள்ளது. அதன் மூலமே தங்களது உறவை தொடர்ந்து வந்துள்ளனர்.
அப்போது, இருவரும் 'நிர்வாண வீடியோ கால்' அழைப்புகளில் ஈடுபட்டுள்ளனர். அந்த சமயத்தில் பாதிக்கப்பட்ட பெண், அவரது காதலனிடம் "இந்த வீடியோ காணொளியை பதிவு செய்ய வேண்டாம்" என்று மீண்டும் மீண்டும் தெரிவித்துள்ளார். காதலி கூறியதை அடுத்து "தான் அவ்வாறு செய்யவில்லை எனவும், இந்த பதிவை எப்படி ரெக்கார்ட் செய்வது என்று தனக்கு தெரியாது" என்று அவரது காதலியிடம் அப்போது கூறியுள்ளார்.
ஆனாலும் அந்த நபர் அவரது முன்னாள் காதலிக்கு தெரியாமல் அவர்களது காணொளி அனைத்தையும் பதிவு செய்த வண்ணமே இருந்திருக்கிறார். 2023 பிப்ரவரி முதல் அக்டோபர் வரை, அந்த நபர் பாதிக்கப்பட்டவரின் 7 முதல் 55 நிமிடங்கள் வரையிலான 17 நிர்வாண வீடியோக்களை இரகசியமாகப் பதிவு செய்து வந்துள்ளார். மேலும் , அந்த வீடியோக்களை அந்த நபர் தன் சொந்த பாலியல் திருப்திக்காக பயன்படுத்தியதாகவும், அவற்றை சிங்கப்பூரில் உள்ள தன் வீட்டில் இருந்த ஒரு ஹார்டு டிரைவில் சேமித்தும் வைத்துள்ளார்.
அதன் பின்னர், 2024 ஜனவரியில் அவர்கள் இருவரும் தங்களது உறவினை முறித்துக்கொண்டுள்ளனர். இதனையடுத்து, அந்த நபர், மீண்டும் வேறு ஒரு பெண்ணை காதலிக்கத் தொடங்கியுள்ளார். அவருடைய புதிய காதலியான 37 வயதுப் பெண், 2024-ம் ஆண்டு ஜனவரி 6-ம் தேதி அவர்கள் தங்கி இருந்த வீட்டைச் சுத்தம் செய்துகொண்டிருந்துள்ளார். அப்போது அந்த அறையில் ஒரு ஹார்டு டிரைவைக் கண்டுபிடித்துள்ளார். அதில் அவர் பார்த்த நிர்வாண வீடியோக்களைக் கண்டு அதிர்ச்சியடைந்து மறுநாள், அந்த புதிய காதலி அந்த நபரை எதிர்கொண்டு, எல்லா வீடியோக்களையும் நீக்குமாறு கூறியுள்ளார்.
அந்த ஹார்டு டிரைவ் தனக்கு எதிரான ஆதாரமாகப் பயன்படுத்தப்படலாம் என்று அஞ்சிய அந்த நபர், உடனடியாக அதிலிருந்த வீடியோக்களை நீக்கியுள்ளார். இந்த சம்பவத்தினையடுத்து, 2024-ம் ஆண்டு மே 15-ம் தேதி, அவரது காதலி அவரது சமூக ஊடகப் பக்கத்தில் அவரது செயல்களை அம்பலப்படுத்தி ஒரு கருத்தினை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவினை பார்த்த அந்த நபரின் முன்னாள் காதலி, இந்த விஷயம் குறித்து அறிந்துள்ளார். தனது முன்னாள் காதலனின் செயலால் தன்னால் தூங்க முடியவில்லை என்றும், அவன் தன் வாழ்க்கையை நாசமாக்கிவிட்டதாகவும், தனக்குத் தற்கொலை எண்ணங்கள் வருவதாகவும் கூறி அந்த நபரை தொலைபேசியில் அழைத்துள்ளார். பதிலுக்கு அந்த நபர், அவரது முன்னாள் காதலி, அவர் மீது சுமத்திய குற்றச்சாட்டுகள் அனைத்தும் "அபத்தமானவை மற்றும் நகைப்புக்குரியவை" என்று அவர் பதிலளித்துள்ளார். தான் ஏற்கனவே ஆதாரங்களை அழித்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், இங்குதான் மிகப்பெரிய திருப்பமே நிகழ்ந்துள்ளது. அந்த நபரின் அப்போதைய காதலி ஏற்கனவே அந்த வீடியோக்களை ஒரு நகலெடுத்து எடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளார் என்பது அந்த நபருக்கு தெரிந்திருக்கவில்லை. இது ஒரு புறம் இருக்க, தனது நற்பெயருக்கும், தன் வேலைக்கும் ஆபத்து வந்துவிடுமோ என்று பயந்து, அந்த முன்னாள் காதலியும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
குற்றம் சட்டப்பட்டவரின் வழக்கறிஞர், அந்த நபர் தனது முன்னாள் காதலியுடன் உணர்வுப்பூர்வமான தொடர்பைப் பேணுவதற்காகவே அந்தச் செயல்களைச் செய்ததாகக் கூறி, அவர் மீது கருணை காட்டும்படி கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், அந்த நபர் ஏற்கனவே அவரது முன்னாள் காதலிக்கு இழப்பீடு வழங்கிவிட்டதாகவும் அந்த வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
தனது முன்னாள் காதலியின் எதிர்ப்பினை மீறியும், தன் மீது வைக்கப்பட்ட நம்பிக்கையைத் தவறாகப் பயன்படுத்தி, அந்த நபர் தெரிந்தே மீண்டும் மீண்டும் அந்தக் குற்றத்தைச் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டதன் அடிப்படையில் அந்த நபருக்கு மூன்றரை மாத சிறைத்தண்டனை கோரப்பட்டது.
44 வயதான அந்த நபர், மூன்று குற்றச்சாட்டுகளில் ஒன்றை ஒப்புக்கொண்டதை அடுத்து, அவருக்கு மூன்று மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஒருவரின் அனுமதியின்றி அவரைப் படம்பிடித்தது மற்றும் திரைப்படச் சட்டத்தை மீறியது ஆகியவை அந்தக் குற்றச்சாட்டுகளில் அடங்கும் என்று கூறப்பட்டுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்