கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை அடுத்த ஓந்தியம் கிராமத்தைச் சேர்ந்தவர் 25 வயதுடைய மாதேஷ்வரி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், இந்த தம்பதிக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். ஏழுமலை கூலி வேலை செய்து வரும் காரணத்தினால் மனைவி மாதேஸ்வரி வீட்டில் இருந்து குழந்தைகளை பார்த்து வந்துள்ளார். காலையில் வேலைக்கும் செல்லும் ஏழுமலை மீண்டும் மாலையில் தான் வீடு திரும்புவார் என சொல்லப்படுகிறது.
எனவே வீட்டில் தனியாக இருக்கும் மனைவியின் நடத்தையின் மீது கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அடிக்கடி கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், கடந்த (ஆக- 11) ஆம் தேதி இரவு சுமார் 7 மணியளவில் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த ஏழுமலை, “நான் இல்லாத போது எவன் கூட பேசுற” என கேட்டு மாதேஷ்வரியை தாக்கியதில் அவர் காயமடைந்தார். இதையடுத்து மாதேஷ்வரி ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாதேஷ்வரியிடம் சிங்காரப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர். அதன் அடிப்படையில், கணவன்-மனைவி இருவரையும் விசாரணைக்காக நேற்று (ஆக -13) ஆம் தேதி மாலை காவல் நிலையத்திற்கு வருமாறு போலீசார் அழைத்திருந்தனர். இதையடுத்து மாதேஷ்வரி தனது இரு மகன்கள் மற்றும் தாயாருடன் இருசக்கர வாகனத்தில் சிங்காரப்பேட்டை காவல் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது தன்னை ஏழுமலை பின்தொடர்ந்து வருவதாகவும், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் மாதேஷ்வரி செல்போன் மூலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால், போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்காமல், “என்ன நடந்துவிடப் போகிறது, வேகமாக காவல் நிலையத்திற்கு வந்துவிடுங்கள்” எனக் கூறியதாக தெரிகிறது. இந்த நிலையில், முருகன் கோவில் அருகே மாதேஷ்வரி சென்றுகொண்டிருந்தபோது, அவரை ஏழுமலை வழிமறித்துள்ளார்.
பின்னர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, மாதேஷ்வரியின் கழுத்து மற்றும் மார்புப் பகுதியில் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. மாதேஷ்வரியின் தாயார் அலறிய சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மற்றும் பொதுமக்கள் அங்கு திரண்டனர். படுகாயமடைந்தவரை மீட்டு உடனடியாக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, மாதேஷ்வரியை தாக்கிவிட்டு ஏழுமலை அங்கிருந்து தப்பி தலைமறைவானார். இதுகுறித்து சிங்காரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள ஏழுமலையை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், மாதேஷ்வரி முன்கூட்டியே தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. காவல் நிலையத்திற்கு செல்லும் வழியிலேயே பெண்ணை கணவர் கத்தியால் வெட்டிய சம்பவம் சிங்காரப்பேட்டை பகுதியில் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்