
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த மேல்களவாய் கிராமம் ரோட்டு தெருவை சேர்ந்தவர்கள் காசிலிங்கம்-விஜயகுமாரி தம்பதிகள். இவர்களுக்கு அம்சவேணி(39) என்ற மகளும், மணிகண்டன்(37) என்ற மகனும் உள்ளனர் . இதில் மகள் அம்சவேணி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த செல்வம் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், இரண்டு பிள்ளைகளுடன் கணவர் வீட்டில் வசித்து வந்துள்ளார். மேலும் மகன் மணிகண்டன் முதுகலை பட்டப்படிப்பு முடித்த நிலையில், மது போதைக்கு அடிமையாகி படித்த படிப்பிற்கு உரிய வேலைக்கு செல்லாமல் எலக்ட்ரீசியன் வேலைக்கு சென்று வந்துள்ளார்.
இதனிடையே காசிலிங்கத்தின் தந்தை அண்ணாமலை சம்பாதித்த சுமார் 1 ஏக்கர் நிலத்தை காசிலிங்கத்தின் உடன் பிறந்தவர்கள் ஏமாற்றி விற்று விட்டதாக கூறப்படுகிறது. மகன் குடிபோதைக்கு அடைமையானதால் தன் பேரிலுள்ள 20 சென்ட் இடத்தை தன் மகள் அம்சவேணி பெயரில் காசிலிங்கம் எழுதி வைத்து விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் மணிகண்டன் குடிபோதையில் அடிக்கடி தன் தந்தை காசிலிங்கம் மற்றும் தாய் விஜயகுமாரி ஆகியோரிடம் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு அம்சவேணி தன் தாய் வீடான மேல்களவாய் கிராமத்திற்கு வந்து தங்கி இருந்து தன் தாத்தா அண்ணாமலை சொத்து தொடர்பாக வழக்கறிஞர்கள் மூலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே மணிகண்டன் தன்னுடைய 37-வது பிறந்த நாளான ஏப்ரல் 24-ஆம் தேதி இரவு மது போதையில் வீட்டிற்கு வந்து தன் பெற்றோர்கள் மற்றும் அக்கா ஆகியோருடன் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த அக்கா அம்சவேணி தம்பி மணிகண்டனை கட்டையால் தலை மற்றும் முகத்தில் பலமாக தாக்கியதில் இரத்த வெள்ளத்தில் மணிகண்டன் அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். அதனை கண்ட அக்கம் பக்கத்தினர் மணிகண்டனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் செஞ்சி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆபத்தான நிலையில் காணப்பட்ட மணிகண்டனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், செல்லும் வழியிலேயே மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்தக் கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த செஞ்சி போலீசார் மேல் களவாய் பகுதிக்கு சென்று, நேரில் விசாரணை செய்து தம்பியை கட்டையால் தாக்கி கொலை செய்த அக்கா அம்சவேணியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.சொத்து தொடர்பான தகராறில் உடன் பிறந்த அக்காவே கட்டையால் அடித்து தம்பியை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.மேலும் தன் பிறந்தநாளில் மணிகண்டன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மேல் களவாய் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்