சிவகங்கை மாவட்டம், இடையமேலூர் அருகே தேவயானைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் 42 வயதுடைய மகேஸ்வரன். விவசாயியான இவர், இன்று(நவ 25) காலை வழக்கம்போல் தனது பணிகளை முடித்து விட்டு, அருகிலுள்ள இடையமேலூர் கடைவீதிப் பகுதிக்குச் சென்றுள்ளார். அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மகேஸ்வரனை குறிவைத்து தாக்கியுள்ளனர். அவர்களிடமிருந்து தப்பிக்க மகேஸ்வரன் ஓடிய நிலையில், மர்ம நபர்கள் அவரை விடாமல் துரத்திச் சென்று, அவரைச் சரமாரியாக வெட்டியதாகக் கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்த மகேஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகத் தெரிகிறது. இதையடுத்து, கொலை செய்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள கடைவீதிப் பகுதியில் பட்டப்பகலில் நடந்த இந்தச் சம்பவத்தைக் கண்டு அங்கிருந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். திடீரென நடந்த தாக்குதலால் அச்சமடைந்த மக்கள், அங்கிருந்து நாலாபுறமும் சிதறி ஓடினர். இதுகுறித்து தகவலறிந்த சிவகங்கை தாலுகா காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர் வழக்கு பதிவு செய்து மகேஸ்வரனின் உடலைக் கைப்பற்றிய போலீசார், உடற்கூறு ஆய்வுக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலை நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடமும் விசாரணை நடத்தி, கொலையாளிகள் தப்பிச் சென்ற வழித்தடம் மற்றும் அவர்களின் அடையாளங்கள் குறித்து தகவல்களைச் சேகரித்து வருகின்றனர்.
மகேஸ்வரன் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் என்ன? முன்விரோதம் காரணமாக இந்தச் சம்பவம் நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலையாளிகளைப் பிடிக்கவும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சிவகங்கை அருகே மக்கள் நடமாட்டம் மிகுந்த கடைவீதியில் விவசாயி ஓட ஓட விரட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்