
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள அன்னவாசல் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் 20 வயதான காளீஸ்வரன், அன்னவாசல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மைக் செட் அமைக்கும் வேலை பார்த்து வருகிறார். நேற்று சங்கமங்கலம் கிராமத்தில் செல்வம் என்பவரின் புதிய வீட்டில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற இருந்த புதுமனை புகுவிழாவிற்காக காளீஸ்வரன் மைக் செட் போடும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது 3 டூவீலர்களில் வந்த 8 க்கும் மேற்பட்டோர் காளீஸ்வரனை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் காயமடைந்த காளீஸ்வரனை அக்கம்பக்கத்தினர் மீட்டு மானாமதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி காளீஸ்வரன் உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எஸ்.பி., சிவபிரசாத் மற்றும் மானாமதுரை டி.எஸ்.பி., பார்த்திபன் ஆகியோர் கொலை நடந்த இடத்தை பார்வையிட்டனர்.
இது குறித்து காளீஸ்வரனின் உறவினர்கள் கூறியதாவது:
சங்கமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சசிகுமார் என்பவரை மானாமதுரையில் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு கீழப்பசலை கிராமத்தைச் சேர்ந்த சிலர் வெட்டியதில் படுகாயமடைந்தார். இதற்கு பழி தீர்க்கும் வகையில் கீழப்பசலை கிராமத்தைச் சேர்ந்த பிரவீன் என்பவரை கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கண்மாயில் வெட்டி கொலை செய்தனர். இதையடுத்து இரு தரப்பைச் சேர்ந்தவர்களும் மேலும் பழிக்கும் பழியாக கொலை செய்ய வேண்டும் என சபதம் எடுத்திருந்தனர்.
இந்நிலையில் பிரவீன் கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய ஒருவர் நேற்று சங்கமங்கலம் கிராமத்தில் புதுமனை புகுவிழா நடைபெறும் வீட்டில் இருப்பதாக பிரவீன் தரப்பினருக்கு தகவல் கிடைத்து அவர்கள் பழிவாங்கும் நோக்கில் வந்துள்ளனர். தேடி வந்த நபர் இல்லாத நிலையில் அங்கு மைக் செட் போடும் பணியில் ஈடுபட்டிருந்த காளீஸ்வரனை ஆள் மாற்றி வெட்டி கொலை செய்து விட்டதாக கூறினர். இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கொலை செய்தவர்களை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
குற்றவாளிகளை கைது செய்த பிறகே என்ன நடந்தது? பழிக்கு பழி வாங்கும் சம்பவத்தில் காளீஸ்வரன் கொலை செய்யப்பட்டாரா அல்லது காளீஸ்வரன் கொலை செய்யப்பட்டதற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். மைக் செட் அமைக்கும் வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.