"அடிக்கடி தொல்லை கொடுத்து வந்த இளைஞர்" - வீட்டிற்கு வரவழைத்து மிளகாய்ப் பொடி தூவி... கொடூரக் கொலை! நடந்தது என்ன?

வீட்டின் நுழைவு வாயிலேயே அவரது கண்களில் மிளகாய் பொடியைத் தூவி உள்ளார்
Sivakasi Murder
Published on
Updated on
2 min read

சிவகாசியில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்தவர் கண்ணில் மிளகாய் பொடியை தூவி அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

சிவகாசி கிழக்குப் பகுதி விஜயலட்சுமி காலனியில் வசிப்பவர் மருதாயி (38). இவரது கணவர் சோனைமுத்து இறந்துவிட்ட நிலையில், இவருக்கு திருமணமான ஒரு மகளும், 16- வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் கடந்த மே மாதம் மருதாயி  தனது வீட்டில் ஈஸ்வரி, திலகம் மற்றும் அவரது தோழிகளுடன் இருந்தபோது 6 பேர் கொண்ட கும்பல் மருதாயி வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, ஆயுதங்களை காட்டி மிடத்தி உள்ளனர். மேலும் ஈஸ்வரியை கத்தியால் தலையில் தாக்கி அவர்களிடமிருந்த 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தோடு, வெள்ளி கொலுசு, செல்போன்கள் மற்றும் 7 ஆயிரம் ரொக்கப் பணத்தையும் பறித்துக் கொண்டு தப்பியுள்ளனர். இச்சம்பவம் குறித்து மருதாயி தந்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்குப் பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து காளியம்மன் கோவில் பழைய தெருவைச் தங்க முனீஸ்வரன் (26 ) உள்பட ஆறு பேரை கைது செய்து சிறையிலடைத்தனர். 

இவ்வழக்கில் கடந்த 4- நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்து ஜாமினில்  வெளிவந்த தங்க முனீஸ்வரன் தினந்தோறும் சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு வந்துள்ளார். இதற்கிடையே ஜாமினில் வெளிவந்துள்ள தங்க முனீஸ்வரன் தான் சிறைக்குச் செல்ல காரணமாயிருந்ததாக கூறி, மருதாயியின் வீட்டிற்கு தினமும் சென்று அவரிடம் பிரச்சனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மருதாயி தங்க முனீஸ்வரனை தனது வீட்டிற்கு வரவழைத்ததுடன், வீட்டின் நுழைவு வாயிலேயே அவரது கண்களில் மிளகாய் பொடியைத் தூவி உள்ளார். இதன் காரணமாக தன்நிலை தடுமாறிய தங்க முனீஸ்வரனின் கழுத்தில் மருதாயி அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே தங்க முனீஸ்வரன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். தகவலறிந்த போலீஸ் டிஎஸ்பி குருசாமி தலைமையிலான போலீசார்கள் சம்பவ இடத்திற்குச் சென்று தங்க முனீஸ்வரனின் பிரேதத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வாகனம் மூலமாக அனுப்பி வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து கொலை சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்த சிவகாசி கிழக்குப் பகுதி காவல் நிலைய போலீசார் மருதாயி, அவரது மகன் மற்றும் உறவுக்காரப் பெண்ணான மதுரை மாவட்டம் வில்லூரைச் சேர்ந்த ஒருவரையும் போலீஸ் வாகனம் மூலமாக சிவகாசி கிழக்குக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று கொலைக்கான உண்மையான காரணம்குறித்தும், கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார்? யார்? என்பது பற்றியும் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொலையான தங்கமுனீஸ்வரன் கூலி வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகாத பட்சத்தில், இவர் மீது சிவகாசி வட்டாரத்திலுள்ள காவல் நிலையங்களில் 4- வழிப்பறி வழக்குகளும், பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கு ஒன்றும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com