“பெண் குரலில் பேசி உல்லாசத்திற்கு அழைத்த கும்பல்” - ஆசையுடன் சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. பெட்ரோல் பங்கில் நடந்த அரிவாள் வெட்டு!

தனது செல்போனில் ஒரு தனியார் செயலியைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தியுள்ளார்...
“பெண் குரலில் பேசி உல்லாசத்திற்கு அழைத்த கும்பல்” - ஆசையுடன் சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. பெட்ரோல் பங்கில் நடந்த அரிவாள் வெட்டு!
Published on: 
Updated on: 
2 min read

சென்னை தாம்பரம் அருகே செல்போன் செயலி மூலம் பெண் குரலில் பேசி இளைஞர் ஒருவரைத் தனியாக வரவழைத்து, அவரிடம் பணம் கேட்டு மிரட்டியதுடன், பணம் தர மறுத்ததால் பட்டாக்கத்தியால் சரமாரியாக வெட்டிய 5 பேர் கொண்ட கும்பலை பீர்க்கன்காரணை போலீசார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் தாம்பரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த நித்திஷ்குமார் (24), கடந்த 7 நாட்களுக்கு முன்பு டெலிவரி வேலைக்காக சென்னை வந்துள்ளார். தாம்பரத்தை அடுத்த முடிச்சூர் லட்சுமி நகர் பகுதியில் நண்பர்களுடன் தங்கியிருந்து வேலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், ஒருநாள் இரவு வேலை முடிந்து வீட்டிற்குச் சென்ற நித்திஷ்குமார் தூங்கச் சென்றுள்ளார். ஆனால், தூக்கம் வராததால் தனது செல்போனில் ஒரு தனியார் செயலியைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தியுள்ளார். அதில் இடம்பெற்றிருந்த தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டபோது, மறுமுனையில் பெண் குரலில் பேசிய நபர், அவரிடம் ஆசை வார்த்தைகள் கூறி தனிமையில் உல்லாசமாக வருமாறு அழைத்துள்ளார்.இதை நம்பிய நித்திஷ்குமார், தனது பல்சர் இருசக்கர வாகனத்தில் அவர்கள் அனுப்பிய கூகுள் மேப் வழிகாட்டுதலின்படி மேற்கு தாம்பரம் குறிஞ்சி நகர் பகுதிக்குச் சென்றுள்ளார்.

ஆனால், அங்கு பெண் யாரும் இல்லாமல் 4 இளைஞர்கள் மட்டும் இருந்துள்ளனர். அவர்கள் நித்திஷ்குமாரைச் சுற்றிவளைத்து ரூ.10 ஆயிரம் கேட்டு மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்த நித்திஷ்குமார், தனது தம்பியிடம் பணம் வாங்கி வருவதாகக் கூறி, நண்பர் பார்த்திபனைத் தொடர்புகொண்டுள்ளார். சிறிது நேரத்தில் பார்த்திபன் மற்றொரு நபருடன் இருசக்கர வாகனத்தில் அங்கு வந்துள்ளார். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால், பணம் பறிக்க முயன்ற கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.

இதையடுத்து, சில மணி நேரங்கள் கழித்து நித்திஷ்குமார், அவரது தம்பி உள்ளிட்ட 3 பேர் தாம்பரம் கிஷ்கிந்தா சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே நின்றுகொண்டிருந்தனர். அப்போது அங்கு மீண்டும் வந்த அந்தக் கும்பல், இருசக்கர வாகனத்தால் அவர்கள் மீது மோதித் தகராறில் ஈடுபட்டுள்ளது. தொடர்ந்து, 5 பேர் கொண்ட கும்பல் நித்திஷ்குமாரை விரட்டிச் சென்று பட்டாக்கத்தியால் தலையில் சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பியோடியது.

Tambaram Fake Woman Voice App Scam
Tambaram Fake Woman Voice App Scam

இதில் பலத்த காயமடைந்த நித்திஷ்குமாரை அவ்வழியாகச் சென்றவர்கள் மீட்டு தாம்பரம் தலைமை மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரது தலையில் 18 தையல்கள் போடப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவலறிந்த பீர்க்கன்காரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவம் நடைபெற்ற பகுதிகளில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில், தாம்பரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து பொதுமக்களை மிரட்டி ரகளையில் ஈடுபட்டு வந்த கும்பலுக்கு இந்தச் சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

மேலும், ரகசிய விசாரணையில் குற்றவாளிகள் கடப்பேரி மலை அருகே பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு விரைந்த போலீசார், 5 பேரையும் சுற்றிவளைத்துக் கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், கைது செய்யப்பட்டவர்கள் தாம்பரம் இரும்புலியூர் பகுதியைச் சேர்ந்த ஹரிஷ் (23), கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தைச் சேர்ந்த அன்பரசு (21), இரும்புலியூரைச் சேர்ந்த அபிஷேக் (19), மேற்கு தாம்பரத்தைச் சேர்ந்த அஜித் (18) மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.

இதில், அன்பரசுதான் பெண் குரலில் பேசி நித்திஷ்குமாரை வரவழைத்ததாகக் கூறப்படுகிறது. அவர்களிடமிருந்து 2 பட்டாக்கத்திகள் மற்றும் 2 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, கைது செய்யப்பட்ட 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். 17 வயது சிறுவன் என்பதால், சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

மேலும், கைது செய்யப்பட்டவர்கள் தாம்பரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் யார் பெரிய ரவுடி என்பதைக் காட்டுவதற்காகத் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டு வந்ததாகவும், இதற்கு முன்பும் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாகவும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்கிடையே, செல்போன் செயலிகள் மூலம் பெண் குரலில் பேசி இளைஞர்களைத் தனியாக வரவழைத்து பணம் பறிக்கும் சம்பவங்கள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.