“விஜய் அண்ணா, உங்க காலைத் தொட்டு கேட்டுக்கிறேன்” - கோவில் கதவை பூட்டி பெண் கோரிக்கை.. உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி விபரீதம்!

போலீஸ் பாதுகாப்புடன் ஆடி கிருத்திகை திருவிழாவை நடத்த அனுமதி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது...
tirupathhur kovil issue
tirupathhur kovil issue
Published on
Updated on
2 min read

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பூங்குளம் அருகே பலப்பல்நத்தம் பகுதியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பழமை வாய்ந்த பொன்மலை முருகன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் பலப்பல்நத்தம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். மேலும், ஆண்டுதோறும் ஆடி கிருத்திகை திருவிழா ஊர் பொதுமக்கள் முன்னிலையில் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில், கோயில் அமைந்துள்ள இடம் தங்களுக்கு சொந்தமானது என அதே பகுதியைச் சேர்ந்த பிச்சியம்மாள் மற்றும் அவரது மகள் கலைச்செல்வி ஆகியோர் கூறி வருகின்றனர்.

கோயிலை நிர்வகிக்கும் உரிமையும் தங்களுக்கே உள்ளது என அவர்கள் தெரிவித்து, இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு தற்போது நிலுவையில் இருந்து வருகிறது. இதற்கிடையே, வரும் நீற்று தேதி ஆடி கிருத்திகை திருவிழாவை நடத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் சார்பில் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டது. இந்தக் கோயிலுக்கு ஆடி கிருத்திகை நாளில் 32 கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் காவடி எடுத்தல், அலகு குத்துதல், முடி காணிக்கை உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்தி வருவதால், வழக்கம்போல் திருவிழாவை நடத்த அனுமதிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, திருப்பத்தூர் மண்டல துணை வட்டாட்சியர் செல்வராஜ் முன்னிலையில், போலீஸ் பாதுகாப்புடன் ஆடி கிருத்திகை திருவிழாவை நடத்த அனுமதி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் நேற்று கோயிலில் திருவிழா ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில், பிச்சியம்மாள் மற்றும் அவரது மகள் கலைச்செல்வி ஆகியோர் திடீரென கோயில் கேட்டை பூட்டியுள்ளனர். தொடர்ந்து, கலைச்செல்வி தனது தலையில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனைப் பார்த்த அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர், கோயிலுக்கு அருகே அமர்ந்த கலைச்செல்வி, தமிழக வெற்றிக் கழகத்தின் துண்டை கழுத்தில் அணிந்துகொண்டு, தமிழக முதலமைச்சர் விஜய்க்கு வேண்டுகோள் விடுத்தார். “விஜய் அண்ணா, உங்கள் காலைத் தொட்டு வணங்கி கேட்டுக்கொள்கிறேன். உங்கள் கட்சியைச் சேர்ந்த சகோதரியான எனக்கு உதவி செய்ய வேண்டும். இந்தக் கோயில் எங்களுக்கு சொந்தமானது. அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு திருவிழா நடத்த அனுமதி வழங்கியுள்ளனர்” என குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

மேலும், இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறிய அவர், முதலமைச்சர் விஜய் தலையிட்டு தங்களுக்கு உரிய தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார். நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், ஆடி கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு கோயில் கேட்டை பூட்டிவிட்டு பெண் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதாக கூறப்படும் சம்பவம் வாணியம்பாடி மற்றும் பலப்பல்நத்தம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பு: மன அழுத்தம் அல்லது தற்கொ*லை எண்ணம் ஏற்பட்டால், அரசு உதவி மையமான 104 அல்லது சினேகா உதவி மையம் 044-24640050 ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com