"லுங்கியால் கை, கால்களை கட்டி கொடூர தாக்குதல்!" சிறையில் சபரிவர்மன் எப்படி உயிரிழந்தார்? சிபிசிஐடி பகீர் தகவல்

சபரி வர்மன் சிறையில் இருந்து தன் மனைவியையும் குழந்தையையும் பார்க்க செல்ல வேண்டும் என சத்தம் போட்டு உள்ளார்.
Sabari Varman custodial death
Sabari Varman custodial death
Published on
Updated on
1 min read

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே உள்ள ஈத்தங்காட்டை சேர்ந்தவர் 34 வயதான சபரிவர்மன். மாற்றுத் திறனாளியான இவர், கடையில் இருந்து 15 பொட்டலம் புகையிலை பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது. நாகர்கோவில் நீதிமன்றத்தால் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்ட அவர், மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். நாகர்கோவிலில் உள்ள சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், கடந்த 13ம் தேதி சிறையில் வைத்து அவர் காவல்துறையால் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. மேலும், இந்த கொலை வழக்கு நாடெங்கிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

தற்போது இந்த வழக்கில் புதிய திருப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இவரது கொலை வழக்கில் 3 சிறை வார்டன்கள், 8 கைதிகளுக்கு இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டு நாங்குநேரி சிறையிலும், 8 கைதிகள் பாளையங்கோட்டை சிறையிலும் அடைக்கப்பட்டனர். தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சபரி வர்மன் கொலை வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டு தற்போது தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும், சிபிசிஐடி தென்மண்டல கண்காணிப்பாளர் ஷாஜிதா மற்றும் போலீசார் குமரி மாவட்டத்திற்கு வந்து சிறையில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 8 கைதிகளிடமும், நாங்குநேரி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிறை 3 வார்டன்களிடமும் சிபிசிஐடி போலீஸார் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அதிர்ச்சியளிக்கும் பல தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதாவது, சம்பவத்தன்று இரவு சபரி வர்மன் சிறையில் இருந்து தன் மனைவியையும் குழந்தையையும் பார்க்க செல்ல வேண்டும் என சத்தம் போட்டு உள்ளார். இதுகுறித்து பணியில் இருந்த சிறை வார்டனிடம் மற்ற கைதிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

வார்டன் வந்து சபரி வர்மனை கண்டித்ததோடு அவரை தாக்கியுள்ளார். அதன் பிறகும் சபரி சத்தம் போட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து வார்டன்களின் தூண்டுதலின் பேரில் 8 கைதிகளும் சபரி வர்மனை பயங்கரமாக தாக்கத் தொடங்கியுள்ளனர். ஒரு கட்டத்தில் லுங்கியால் அவருடைய இரு கைகள் மற்றும் கால்களை கட்டி வைத்து கொடூரமாக தாக்கியுள்ளனர். அப்போது கையில் கட்டப்பட்டிருந்த லுங்கியை சபரி வர்மன் அவிழ்த்து உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கைதிகள் லுங்கியை இரண்டாக கிழித்து அதனை வைத்து சபரியின் கைகளை மீண்டும் கட்டி வைத்து கண்மூடித்தனமாக அடித்துள்ளனர். இந்த கொடூர தாக்குதலில்தான் சபரி வர்மன் இறந்ததாக சிபிசிஐடி போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விவகாரத்தில் மூன்று சிறை வார்டன்களையும் 8 கைதிகளையும் காவலில் எடுத்து விசாரிக்கவும் சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com