

கன்னியாகுமரி மாவட்டத்தில் 17 வயது சிறுமியின் குளியலறை காட்சிகளை செல்போனில் படம் பிடித்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த கால் டாக்சி டிரைவர் போக்சோ வழக்கில் கைது. வீடியோவை இணையத்தில் வெளியிட போவதாக மிரட்டி சிறுமியின் வீட்டு டிரங் பெட்டியில் இருந்த நகைகளை திருடி தப்பியோடி தலைமறைவான டிரைவர் உல்லாசமாக ஊர் சுற்றி வந்த போது செல்போன் டவர் லொகேஷன் மூலம் சென்னையில் வைத்து கைது செய்த குளச்சல் மகளிர் போலீஸார் அவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். யூடியூபில் போக்சோ விழிப்புணர்வு வீடியோவை பார்த்து சிறுமி புகார் அளித்ததை அடுத்து கால் டாக்சி டிரைவர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கணவரை பிரிந்து தனது 17 வயது மகளுடன் தனிமையில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் 2024 ஆண்டு மஸ்கட் நாட்டிற்கு நர்சு வேலைக்கு சென்றுள்ளார். அப்போது தனது 17 வயது மகளை, வயதான தனது தாய் தந்தையரிடம் ஒப்படைத்து சென்றுள்ளார். 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அந்த இளம்பெண் ஊர் திரும்பிய போது 12 ஆம் வகுப்பு படிக்கும் தனது மகளுக்காக பார்ப்பதற்காக ஊர் திரும்பி உள்ளார். அப்போது வீட்டின் டிரங் பெட்டியில் வைத்து சென்ற 5 சவரன் தங்க சங்கிலி மற்றும் கம்மல், மோதிரங்கள் உட்பட தங்க நகைகள் மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் கருங்கல் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
கருங்கல் போலீஸாரும் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். ஆனால் எந்த பலனும் இல்லாததால் அந்த இளம்பெண் மஸ்கட் நாட்டிற்கு வேலைக்கு சென்று விட திருட்டு வழக்கு விசாரணை கிடப்பில் போடப்பட்டது. 2026 ஆம் ஆண்டு அந்த இளம் பெண்ணின் சகோதரர் கருங்கல் போலீசாரை தொடர்பு கொண்டு வழக்கு விவரங்களை கேட்டதால் மீண்டும் திருட்டு வழக்கு விசாரணை சூடு பிடித்தது.
இந்த நிலையில் தற்போது கல்லூரியில் படித்து வரும் இளம் பெண்ணின் மகள் கடந்த மார்ச் மாதம் 16 ஆம் தேதி குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அதில் வயதான தாத்தா பாட்டியுடன் தான் வசித்து வந்த போது 2024 ஆம் ஆண்டு வீட்டின் மேல் தளத்தில் கால் டாக்சி டிரைவர் ஜஸ்டாலீஸன் (42) வாடகைக்கு குடி வந்துள்ளார். இவர் தனது மனைவியை பிரிந்து மண்டைக்காடு புதூர் மீனவ கிராமத்தில் வசித்து வந்துள்ளார். ஜஸ்டாலீஸன் இங்கு குடி வந்த பிறகு வயதான தாத்தா மற்றும் பாட்டிக்கு உதவிகள் செய்து நன்கு கவனித்து வந்ததாக சொல்லப்படுகிறது.
இதனால் அடிக்கடி வீட்டிற்குள் வந்து செல்லும் ஜஸ்டாலீஸன், 2024.ஆம் ஆண்டு தான் 12 ஆம் வகுப்பு படித்து கொண்டிருந்த போது வீட்டின் குளியலறையில் குளித்துக் கொண்டிருந்த சிறுமியை வென்டிலேஷன் ஜன்னல் வழியாக தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். அதை கண்டு சிறுமி சத்தம் போட்டதால் குளியலறை காட்சிகளை இணையத்தில் பரப்பி விடுவதாக மிரட்டியுள்ளார். மேலும் “தனது அறைக்கு வந்தால் அந்த வீடியோ டெலிட் செய்து விடுவதாக கூறி” அறைக்கு அழைத்துள்ளார்.
ஜஸ்டாலீஸன் அறைக்கு சென்ற அந்த சிறுமிக்கு, குளிர் பானத்தை கொடுத்து குடிக்க வற்புறுத்தியதாகவும், குடித்தவுடன் மயங்கிய சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதையும் தனது செல்போனில் வீடியோ எடுத்து வைத்துள்ளார். மயக்கம் தெளிந்து எழுந்த சிறுமியிடம் வீடியோவை காட்டி “நான் அழைக்கும் போதெல்லாம் வரவேண்டும்” என்றும் மிரட்டி அனுப்பியுள்ளார் ஜஸ்டாலீஸன். அந்த வீடியோவை காட்டி, இணையத்தில் வெளியிடுவேன் என மிரட்டி, அடிக்கடி சிறுமியை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
சிறுமி இந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூற முடியாமல், மனதளவில் பெரும் பஹிப்பை சந்தித்துள்ளார். மேலும் வீட்டில் டிரங் பெட்டியில் நகை மற்றும் பணம் இருப்பதை தாத்தா பாட்டி சொன்னதை வைத்து தெரிந்து கொண்ட ஜஸ்டாலீஸன், வீட்டிற்கு வந்து தாத்தா பாட்டிக்கு வலி நிவாரணி மருந்து என்று கூறி மயக்க மருந்தை கொடுத்து தூங்க வைத்து விட்டு டிரெங் பெட்டியின் பூட்டை உடைத்து திறந்து அதில் இருந்த நகைகளை திருடியுள்ளார். தட்டி கேட்ட சிறுமியிடம் “அவசரமாக பணம் தேவைப்படுகிறது எடுத்தது போன்றே வைத்து விடுவேன், நீ இதைப்பற்றி வெளியே கூறினால் வீடியோவை வெளியிடுவேன்” என்று மிரட்டி தப்பி சென்றுள்ளார்.
அம்மா ஊருக்கு வந்த போது டிரெங் பெட்டியில் இருந்த நகைகள் மாயம் ஆகியிருந்ததால் கருங்கல் காவல் நிலையத்தில் புகாரளித்ததை தெரிந்து கொண்ட ஜஸ்டாலீஸன் “உண்மையை வெளியில் சொன்னால் தான் வீடியோவை வெளியிட்டு உன்னையும் கொன்று விடுவேன்” என்று மிரட்டியதால் தாயிடம் உண்மையை சொல்ல முடியாமல் தவித்து வந்துள்ளார்.
இதனால் பெரும் மன அழுத்தத்தில் இருந்தத சிறுமி, தனது இடது கை நரம்பை துண்டித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
தற்போது கல்லூரிக்கு செல்லும் சிறுமி போக்சோ விழிப்புணர்வு வீடியோவை யூடியூபில் பார்த்து விழிப்புணர்வடைந்துள்ளார். மேலும் தனக்கு எதிராக மிகப்பெரிய குற்றத்தை செய்த ஜஸ்டாலீஸன் சட்டத்தில் இருந்து தப்பிக்க கூடாது என்று புகாரளித்ததாகவும் அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ஜஸ்டாலீஸன் மீது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து கொலை மிரட்டல் விடுத்தது தகவல் தொழில்நுட்ப சாதனத்தை தவறாக பயன்படுத்தியது போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர் குளச்சல் அனைத்து மகளிர் போலீசார்.
நகைகளை திருடி தப்பி சென்று 1 வருடத்திற்கு மேலாக தலைமறைவாக இருந்த ஜஸ்டாலீஸன் நகைகளை விற்று உல்லாசமாக ஊர் சுற்றி வந்துள்ளார். இந்நிலையில் அவரின் செல்போன் டவர் லொகேஷன் மூலம் கண்காணித்து சென்னை திருப்பூரில் குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் மேன்சானில் பதுங்கியிருந்த ஜஸ்டாலீஸனை திங்கள்கிழமை மாலை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்துள்ளனர். அதையடுத்து செவ்வாய்கிழமை நாகர்கோவில் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். ஏற்கனவே குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஜஸ்டாலிஸனின் குற்ற பின்னணி குறித்து விசாரிக்காமல் சிறுமியின் குடும்பத்தார் வாடகைக்கு வீடு கொடுத்துள்ளனர். அதனால் இது போன்ற சம்பவம் அரங்கேறிவிட்டதாக தெரிவிக்கும் போலீஸார் பொதுவாக வீடுகளை வாடகைக்கு விடுவோர் குடியேறும் நபர்களின் குற்ற பின்னணிகளை விசாரித்து கவனத்தோடும், பொறுப்போடும் செயல்பட வேண்டும் எனவும் எச்சரிக்கின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.