"பணக்கஷ்டம் இருக்கா? நாங்க உதவுறோம்!" - நைசாக பேசி பெண்களை வேட்டையாடிய டிசிஎஸ் கும்பல்.. நாசிக் பிபிஓ-வில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

அவர்களை நீண்ட காலம் பாலியல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தியுள்ளனர்...
tata consultancy
tata consultancy
Published on
Updated on
2 min read

இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனத்தின் நாசிக் கிளையில் பணியாற்றிய பெண் ஊழியர்களுக்கு நேர்ந்த கொடுமைகள் இப்போது பூதாகரமாக வெடித்துள்ளது. இந்த விவகாரத்தில் தற்போது கிடைத்துள்ள புதிய தகவல்கள் ஒட்டுமொத்த கார்ப்பரேட் உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக, குடும்பப் பிரச்சனை மற்றும் கடும் பணத்தேவையில் இருந்த பெண் ஊழியர்களைக் கண்டறிந்து, அவர்களை இந்த கும்பல் குறிவைத்து வேட்டையாடியுள்ளதாகத் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. வெறும் பாலியல் துன்புறுத்தல் மட்டுமல்லாமல், மதமாற்ற முயற்சிகளும் இங்கே திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டுள்ளன.

நாசிக்கில் உள்ள டிசிஎஸ் பிபிஓ (BPO) வளாகத்தில் கடந்த 2022 முதல் 2026-ன் தொடக்கம் வரை சுமார் நான்கு ஆண்டுகளாக இந்த அத்துமீறல்கள் நடந்துள்ளன. இந்தப் புகாரில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளிகள், அலுவலகத்தில் புதிதாகச் சேரும் பெண்களில் யார் பொருளாதார ரீதியாகப் பலவீனமாக இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டு, அவர்களுக்கு உதவி செய்வது போல நடித்துப் வலையில் வீழ்த்தியுள்ளனர். பணத்தேவைக்காக எந்தச் சூழலையும் சகித்துக்கொள்ளும் கட்டாயத்தில் இருந்த பெண்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களை நீண்ட காலம் பாலியல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தியுள்ளனர்.

இந்தக் கும்பலுக்குத் தலைமை தாங்கியதாகக் கருதப்படும் நிதா கான் (Nida Khan) என்ற பெண் அதிகாரி, தற்போது தலைமறைவாக உள்ளார். இவர் எச்ஆர் (HR) பிரிவில் செல்வாக்கு மிக்கவராக இருந்து கொண்டு, பாதிக்கப்பட்ட பெண்களைக் குற்றவாளிகளிடம் அறிமுகப்படுத்தி வைக்கும் ஒரு பாலமாகச் செயல்பட்டுள்ளார். பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டிய ஒரு பெண் அதிகாரியே, சக பெண் ஊழியர்களைப் பாலியல் வேட்டையாடுபவர்களிடம் சிக்க வைத்தது தான் இந்த வழக்கில் உச்சக்கட்டக் கொடுமை. பாதிக்கப்பட்ட பெண்கள் எச்ஆர் பிரிவிற்குப் புகார் அனுப்பியபோது, நிதா கான் மற்றும் அவரது குழுவினர் அந்தப் புகார்களைக் குப்பைக்குத் தள்ளியதுடன், பாதிக்கப்பட்டவர்களை மேலும் அச்சுறுத்தியுள்ளனர்.

பாலியல் ரீதியான தொல்லைகள் ஒருபுறம் இருக்க, இந்தப் பெண்கள் மீது கடும் மத ரீதியான அழுத்தங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இந்து தெய்வங்களை அவமதிப்பது, இந்து மத நம்பிக்கைகளைக் கிண்டல் செய்வது போன்ற செயல்களில் குற்றவாளிகள் ஈடுபட்டுள்ளனர். அதோடு நிற்காமல், அசைவ உணவுகளைக் கட்டாயப்படுத்தி உண்ண வைப்பது, அலுவலகத்திலேயே நமாஸ் செய்ய வற்புறுத்துவது மற்றும் ஆடை அணியும் முறையை மாற்றச் சொல்வது எனத் திட்டமிட்ட மதமாற்ற முயற்சிகள் நடந்துள்ளன. தௌசிப் அத்தார் (Tausif Attar) என்ற குற்றவாளி, ஒரு பெண் ஊழியரைத் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றிப் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாகவும் எப்ஐஆர்-ல் (FIR) கூறப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் வெளியே தெரிந்தவுடன் நாசிக் போலீசார் 40 நாட்கள் ரகசியமாகச் செயல்பட்டு உண்மைகளைக் கண்டறிந்துள்ளனர். பெண் போலீசார் சாதாரண ஊழியர்களைப் போல அலுவலகத்திற்குள் ஊடுருவி, அங்கு நடக்கும் அத்துமீறல்களைக் கண்காணித்துள்ளனர். இதன் அடிப்படையில் தற்போது ஒன்பது எப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தனிஸ் ஷேக், தௌசிப் அத்தார், ரசா மேமன், ஷாருக் குரேஷி உள்ளிட்ட ஏழு பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் டீம் லீடர்கள் மற்றும் ஆப்பரேஷன்ஸ் ஹெட் அஸ்வினி சைனானி போன்ற உயர் அதிகாரிகளும் அடங்குவர்.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு டாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகரன் தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துள்ளார். இது போன்ற அத்துமீறல்களைத் தனது நிறுவனம் ஒருபோதும் சகித்துக்கொள்ளாது என்றும், தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார். தற்போது டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஆர்த்தி சுப்ரமணியன் தலைமையில் ஒரு உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டு, இந்த விவகாரம் குறித்து விரிவான உள் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட ஊழியர்கள் அனைவரும் நிறுவனத்திலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் இந்த விவகாரத்தைத் தீவிரமாகக் கவனித்து வருகிறார். இந்த வழக்கை விசாரிக்க 12 பேர் கொண்ட சிறப்பு விசாரணைத் தனிப்படை (SIT) அமைக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவிலான நிதி உதவி அல்லது வெளிநாட்டுத் தொடர்புகள் ஏதேனும் இந்தப் பின்னணியில் உள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். ஐடி துறையில் பணிபுரியும் பெண்களுக்குப் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ள நிலையில், நாசிக் டிசிஎஸ் வழக்கு ஒரு மிகப்பெரிய எச்சரிக்கையாக அமைந்துள்ளது. பணத்தேவையை மூலதனமாக வைத்துப் பெண்களைச் சுரண்டிய இந்தக் கும்பலுக்குத் தகுந்த தண்டனை கிடைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com