
தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே உள்ள குறும்பலாப்பேரி ஊரைச் சேர்ந்தவர் 32 வயதுடைய சக்திவேல். இவர் ஆலங்குளத்தில் உள்ள ஒரு டிராக்டர் ஒர்க்ஷாப்பில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக ஆலங்குளம் அருகே உள்ள மருதம்புத்தூரை சேர்ந்த 26 வயதுடைய இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பெண்ணுக்கு திருமணமாகி 7 வருடங்களாவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அந்த இளம்பெண்ணிடம் பழக்கத்தை தொடர்ந்து வளர்த்து வந்த சக்திவேல், அடிக்கடி மருதம்புத்தூருக்கு சென்று நேரில் சந்திக்க ஆரம்பித்துள்ளார்.
பின்னர் அந்த இளம்பெண்ணை ஆசைவார்த்தை கூறி அவருடன் தனிமையில் இருந்துள்ளார். அடிக்கடி அந்த இளம் பெண்ணுடன் தனிமையில் இருந்த சக்திவேல், ஒரு கட்டத்தில் அதனை இளம்பெண்ணுக்கு தெரியாமலேயே தனது செல்போனில் வீடியோவாக எடுத்து வைத்துள்ளார். இந்நிலையில் இளம்பெண்ணின் நடவடிக்கையில் ஏற்பட்ட மாற்றத்தால் அவரது உறவினர்கள் அவரை கண்டித்த நிலையில், இளம்பெண் சக்திவேலுடன் பேசுவதை நிறுத்தி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சக்திவேல், தான் கேட்கும் நேரத்தில் தனக்கு பணம் தரவேண்டும் என்று கூறி ரூ.4 லட்சம் வரை அந்த பெண்ணிடம் இருந்து பணம் பறித்துள்ளார்.
சமீபத்தில் மேலும் 1 லட்சம் ரூபாய் கேட்கவே, அதிர்ச்சி அடைந்த இளம்பெண் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளார். உடனே அந்தரங்க வீடியோக்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுவிடுவேன் என சக்திவேல் கூறியதால், வேறு வழியின்றி அந்த பெண் தனது பெற்றோரிடம் சக்திவேல் அவரை மிரட்டுவது குறித்து தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து அவரது பெற்றோர், ஆலங்குளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கவே, சக்திவேலை பிடித்த போலீசார் அவரை கண்டித்ததோடு அவரிடம் இருந்த அந்தரங்க வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அழித்துள்ளனர்.
இதனிடையே போலீசில் மாட்டி விட்டதால் ஆத்திரம் அடைந்த சக்திவேல், தனது மனைவியின் செல்போனில் அந்த பெண்ணுடன் தனிமையில் இருந்த வீடியோக்களை ஏற்கனவே பதிவு செய்து வைத்திருந்துள்ளார். தனது செல்போனில் போலீசார் வீடியோக்களை அழித்த நிலையில், ஆலங்குளத்தில் தான் வேலை பார்க்கும் ஒர்க்ஷாப்பிற்கு டிராக்டர் கொண்டு வரும் மருதம்புத்தூரை சேர்ந்த முத்துராஜ்(வயது 36) என்பவரிடம் தனது மனைவியின் செல்போனில் இருந்த இளம்பெண்ணின் வீடியோவை சக்திவேல் ஷேர் செய்துள்ளார்.
இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள திட்டமிட்ட முத்துராஜ் இதற்காக தனது நண்பரான மருதம்புத்தூரை முருகசேன் (வயது 42) என்பவரையும் சேர்த்துக்கொண்டு சம்பந்தப்பட்ட இளம்பெண்ணை தங்களது ஆசைக்கு இணங்குமாறு, இல்லையெனில் வீடியோவை பரப்புவதாகவும் மிரட்டி உள்ளனர். ஏற்கனவே சக்திவேலால் தனது வாழ்க்கையை இழந்த இளம்பெண், மேலும் இருவர் சேர்ந்து வீடியோவை வைத்துக்கொண்டு தன்னை மிரட்டியதை வெளியில் யாரிடமும் சொல்ல முடியாமல் தவித்து வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் வாழ்க்கையில் வெறுப்படைந்த இளம்பெண் வேறு வழியில்லாமல் தனது பாட்டி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார் என்ற தகவல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் நேரடி விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனிடையே இளம்பெண் தூக்குப்போட்ட அறையில் ஆலங்குளம் போலீசார் சோதனை செய்தபோது ஒரு நோட்டில் 8 பக்கங்களில் எழுதப்பட்ட உருக்கமான கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில் தனது தற்கொலைக்கு சக்திவேல், முத்துராஜ், முருகேசன் ஆகியோர் தான் காரணம் எனவும், எவ்வளவு பணத்தை இழந்துள்ளார் என்பது குறித்தும், என்னவெல்லாம் துன்புறுத்தினார்கள் என்பது குறித்தும் அவர் எழுதி வைத்திருந்துள்ளார்.
இதையடுத்து மூன்று பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் நேற்று மாலை 3 போரையும் அதிரடியாக கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் சக்திவேலின் மனைவி வீடியோ பரப்பியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இளம்பெண்ணின் மாமனார் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.