
தென்காசி மாவட்டம், கடையம் அருகே உள்ள மயிலப்பபுரம் அடுத்துள்ள ராஜா குடியிருப்பு பகுதியை சேர்ந்த பிரின்சிபால் என்பவற்றின் மகன் 40 வயதுடைய வினோத்கனி. இவர் அதே பகுதியில் கடை வைத்து மரம் வெட்டும் தொழில் செய்து வருகிறார். வினோத்கனிக்கு அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணுடன் சில வருடங்களுக்கு முன்பு திருமணமான நிலையில் நான்கு குழந்தைகள் உள்ளனர். இவர் நேற்று இரவு அதே பகுதியில் உள்ள அவரது உறவினர் பன்றி பண்ணை அருகே நின்றுகொண்டிருந்த போது அங்கு வந்த மர்ம நபர்கள் திடீரென வினோத் கனியை அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.
இதில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்த வினோத் கனி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை பார்த்த பகுதி வழியே சென்ற பொதுமக்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கடையம் காவல் நிலைய ஆய்வாளர் சுரேஷ்குமார், சுரண்டை காவல் ஆய்வாளர் ஹரிஹரன் மற்றும் போலீசார் உயிரிழந்த வினோத் கனி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் முதற்கட்ட விசாரணையில் இந்த கொலையானது இட பிரச்சினை சம்பந்தமாக நடைபெற்றுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். வினோத் கனிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய சார்லஸ் என்பவருக்கும் இட தகராறு காரணமாக இருவருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டு இருவரும் அடிக்கடி வாக்குவாதம் செய்து வந்ததாகவும் போலீசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே சார்லஸ் இந்த கொலையை செய்திருப்பாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருவதாக சொல்லப்படுகிறது.
தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக இரண்டு குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். அதனை தொடர்ந்து கைது செய்யயப்பட்ட குற்றவாளிகளிடம் கடையம் போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். மரம் வெட்டும் தொழிலாளி இரவில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.