தென்காசி மாவட்டம் பொட்டல்புதூர் பகுதியில் பொதுமக்கள் அதிகம் நடமாடும் முக்கியமான வணிகப் பகுதியில் வாலிபர் ஒருவர் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொட்டல்புதூர் தீபத் திடல் பகுதியில் ஏராளமான வணிகக் கடைகள் செயல்பட்டு வருவதால், அப்பகுதியில் எப்போதும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இந்த நிலையில், நேற்று இரவு சுமார் 9 மணியளவில் பொட்டல்புதூரைச் சேர்ந்த லட்சுமணன் என்பவரின் மகன் 30 வயதுடைய சந்தான பாலமுருகன், தீபத் திடல் பகுதியில் உள்ள கடைக்கு பொருட்கள் வாங்கச் சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது அங்கு வந்த மர்ம கும்பல், சந்தான பாலமுருகனை சரமாரியாக தாக்கியதுடன், அவரது தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இந்த கொடூர சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் அச்சத்தில் அலறியடித்துக் கொண்டு ஓடியுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு ஆழ்வார்குறிச்சி காவல் ஆய்வாளர் கலா மற்றும் கடையம் காவல் ஆய்வாளர் சுரேஷ்குமார் தலைமையிலான காவல்துறையினர் விரைந்து சென்றனர். தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்த சந்தான பாலமுருகனின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர், பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே, சம்பவம் குறித்து தகவல் அறிந்த தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அசோக்குமார் மற்றும் ஆலங்குளம் காவல் துணைக் கண்காணிப்பாளர் கிளாட்சன் ஜோஸ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து கொலை நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி, அதனடிப்படையில் குற்றவாளிகளை அடையாளம் காணும் பணியில் ஆழ்வார்குறிச்சி காவல்துறையினர் ஈடுபட்டனர்.
அப்போது சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அதே பகுதியை சேர்ந்த ராஜா மற்றும் முத்து ஆகிய இருவரை ஆழ்வார்குறிச்சி போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையில் மூவருக்கும் இடையே கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு காட்டிற்கு சென்று முயல் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டது தெரியவந்தது. அதன் காரணமாக சந்தான பாரதி நேற்று கொலை செய்யப்பட்ததாக கூறப்படுகிறது. பொட்டல்புதூர் மெயின் பஜார் பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள இடத்தில் வாலிபர் ஒருவர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்