தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள பெரியசாமி புரம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியின் பெயரில் சென்னையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. அந்தக் கடனை வட்டியுடன் சேர்த்து பணமும் கட்டாததால் வாங்கிய கடன் மொத்த தொகையாக இரண்டரை கோடி ரூபாய்க்கு மேல் வந்துள்ளது.
கடனை கட்ட சொல்லி பலமுறை நிதி நிறுவனத்தின் மூலம் பள்ளி நிர்வாகத்திடம் கூறியும், பணம் கட்ட பள்ளி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் காவல்துறையினர் பாதுகாப்புடன் தனியார் பள்ளிக்கு சீல் வைப்பதற்காக நேற்று பள்ளி வழக்கத்திற்கு சென்றுள்ளனர். அப்போது பள்ளிக்கு சீல் வைக்க எதிர்ப்பு தெரிவித்து பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் மற்றும் அவரது பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் பள்ளி மாணவ மாணவியரிடம் பேச்சுவார்த்தை நடத்தி பள்ளி வளாகத்தை விட்டு வெளியேற்றியதுடன் பள்ளிக்கு சீல் வைக்க ஆயத்தமானார்கள். அப்போது பள்ளிக்கு வெளியே நின்று கொண்டிருந்த மாணவ, மாணவிகள் பள்ளி கேட்டை தள்ளிக் கொண்டு சீல் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளியில் உள்ள கட்டிடத்தின் மேலே ஏறி “பள்ளிக்கு சீல் வைத்தால் நாங்கள் கீழே குதித்து தற்கொலை செய்துகொள்வோம்” என மிரட்டினர். இதனை தொடர்ந்து போலீசார், பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மாணவர்களிடம் சமரசம் பேசி அவர்களை கட்டிடத்தின் மேலிருந்து கீழே இறக்கினார்கள்.
தொடர்ந்து பள்ளி வளாகத்தில் இரண்டு தனியார் ஆம்புலன்ஸ்கள் மற்றும் சங்கரன்கோவில் தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பிற்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பள்ளி நிர்வாகத்திடம் பேசிய போலீசார் “மாணவர்களை வைத்து தடுக்க முயற்சிப்பது மிகப்பெரிய குற்றம், இதற்கு தனியாக மாணவர்களை தவறான வழியில் வழிநடத்துகின்றன என வழக்கு பதிவு செய்ய முடியும்” என கூறி பள்ளி நிர்வாகத்தினரை வைத்து மாணவர்களை அப்புறப்படுத்தினர். மாணவர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.