“5 கோடி லஞ்சம் பெற்றாரா காவல் ஆய்வாளர்?” - கட்டுக்கட்டாக எண்ணப்படும் 500 ரூபாய் நோட்டுகள்.. நீதிமன்றம் கொடுத்த அதிரடி உத்தரவு!

மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சுகுமாரன் வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தினர்...
Thanjavur Hospital Bribery Allegation
Thanjavur Hospital Bribery Allegation
Published on: 
Updated on: 
2 min read

தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனை பங்குதாரர்களுக்கு இடையிலான பிரச்சினையில், ஒரு தரப்பினருக்கு ஆதரவாகச் செயல்பட்டு ரூ.5 கோடி லஞ்சம் பெற்றதாக காவல்துறை அதிகாரிகள் மீது புகார் எழுந்துள்ளது. இந்த வழக்கில் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சுகுமாரன் வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்திய நிலையில், அங்கு கட்டுக்கட்டாக ரூ.500 நோட்டுகள் எண்ணப்படுவது போன்ற வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில் பங்குதாரர்களுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் ஒரு தரப்பினருக்கு ஆதரவாகக் காவல்துறையினர் செயல்படுவதாகவும், தங்களை மிரட்டி ரூ.5 கோடி லஞ்சம் பெற்றதாகவும் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர்களில் ஒருவரான சரவணன், தமிழக டிஜிபியிடம் புகார் மனு அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில், வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்க டிஜிபி உத்தரவிட்டார்.

இதையடுத்து, கடந்த (அக் 9) ஆம் தேதி மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சுகுமாரன் வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தினர். அப்போது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து, சுகுமாரனை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் முக்கிய ஆதாரமாகக் குறிப்பிடப்படும் ஐஜி பாலகிருஷ்ணன் மீது இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என சரவணன் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், காவல் ஆய்வாளர் சுகுமாரன் வீட்டில் கட்டுக்கட்டாக ரூ.500 நோட்டுகள் எண்ணப்படுவது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் பணம் எண்ணப்படும் காட்சிகள் இடம்பெற்றுள்ள நிலையில், அது தொடர்பாகப் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எனினும், அந்தப் பணத்தின் பின்னணி மற்றும் வீடியோவின் முழுமையான விவரங்கள் தனியாக உறுதிப்படுத்தப்பட வேண்டியுள்ளது. ஏற்கனவே இந்த விவகாரத்துடன் தொடர்புடைய காவலர்கள் மற்றும் ஆய்வாளர்கள் அடுத்தடுத்து பணியிட மாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், தற்போது இந்த வீடியோ வெளியாகியிருப்பது மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதற்கிடையே, காவல் ஆய்வாளர் சுகுமாரனை உரிய விளக்கம் அளிக்க வாய்ப்பளிக்காமல் கைது செய்தது சட்டவிரோதமானது எனக் கூறி, அவரை விடுவிக்க மதுரை உயர்நீதிமன்றம் நேற்று(அக் 23) உத்தரவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனை பங்குதாரர்கள் இடையிலான பிரச்சினை, காவல்துறை அதிகாரிகள் மீதான லஞ்சப் புகார், சிபிசிஐடி விசாரணை மற்றும் தற்போது வெளியாகியுள்ள பணம் எண்ணும் வீடியோ என அடுத்தடுத்த திருப்பங்கள் இந்த வழக்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com