தஞ்சாவூர் மாவட்டம் மாதாக்கோட்டை காவேரி நகர் பகுதியில் வசித்து வருபவர் 51 வயதுடைய சூரையா. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் திருமணமான நிலையில் சில மாதங்களிலேயே கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளனர். அதனை தொடர்ந்து தனது உறவினர் பெண்ணான விஜயகுமாரி என்பவரை கடந்த 15 வருடங்களுக்கு முன்பு இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த தம்பதிக்கு ஒரு மகன் மாற்று ஒரு மகள் உள்ள நிலையில் சூரையா ரஷ்யாவில் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் விஜயகுமாரிக்கும் சூரையாவிற்கும் இடையே வயது வித்தியாசம் அதிகமாக இருந்ததால், மனைவியின் நடவடிக்கைகள் மீது சூரையாவுக்கு அடிக்கடி சந்தேகம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக வீட்டின் ஹால், படுக்கை அறை உள்ளிட்ட பகுதிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்திய சூரையா, ரஷ்யாவில் இருந்தபடியே இணையம் மூலமாக மனைவியின் அன்றாட நடவடிக்கைகளை கண்காணித்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு மனைவியிடம் தெரிவிக்காமல் திடீரென சொந்த ஊருக்கு வந்த சூரையா, விஜயகுமாரியிடம் வரதட்சணை கேட்டு தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே மீண்டும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் விஜயகுமாரியின் சகோதரியின் குழந்தைக்கு நேற்று காதுகுத்து விழா நடைபெற்ற நிலையில் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக விஜயகுமாரி வீட்டில் இருந்து புறப்படத் தயாராக இருந்துள்ளார். அப்போது அங்கு அரிவாளுடன் வந்த சூரையா அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த சூரையா தனது குழந்தைகளின் கண்முன்னே மனைவியின் தலைமுடியை பிடித்து இழுத்து சரமாரியாக தாக்கியுள்ளார். இந்த தாக்குதல் சம்பவம் முழுவதும் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகிய நிலையில் அந்த காட்சிகளை ஆதாரமாகக் கொண்டு விஜயகுமாரி, தனது கணவர் சூரையா மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் தஞ்சை தமிழ் பல்கலைக்கழக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வரும் போலீசார், சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வெளிநாட்டில் வேலை செய்யும் கணவன் மனைவியை கண்காணிக்க படுக்கை அறை உட்பட வீடு முழுவதும் கேமரா பொருத்திய சம்பவமும், குழந்தைகள் கண்முன்னே மனைவியை தலைமுடியை பிடித்து இழுத்தி சரமாரியாக தாக்கிய சம்பவமும் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்