தனது டாக்டர் மனைவியை.. திட்டம் போட்டு கொலை செய்த டாக்டர் கணவர்.. 6 மாதங்களுக்குப் பிறகு வெளிவந்த உண்மை! அரண்டு போன பெங்களூரு!

உடலின் உள் உறுப்புகளின் மாதிரிகள் (Viscera samples) சேகரிக்கப்பட்டு, தடய அறிவியல் ஆய்வகத்திற்கு (FSL) அனுப்பப்பட்டன...
The doctor's husband planned and murdered his doctor wife
The doctor's husband planned and murdered his doctor wife
Published on
Updated on
2 min read

பெங்களூருவில் தனது மனைவியின் இயற்கைக்கு மாறான மரணம் நிகழ்ந்து ஆறு மாதங்களுக்குப் பிறகு, அவரது கணவரும் மருத்துவருமான மகேந்திர ரெட்டி கொலைக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் ஒரு பொது அறுவை சிகிச்சை நிபுணர் (General Surgeon). இவர்தான் தனது மனைவிக்கு, அதிக அளவில் மயக்க மருந்தைச் செலுத்தி (Anesthetic Overdose) கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம், நகரின் கிழக்குப் பகுதியில் உள்ள முன்னெகொலால் என்ற இடத்தில் உள்ள அவர்களின் வீட்டில், ஏப்ரல் 21 அன்று நடந்துள்ளது.

உயிரிழந்தவர், டாக்டர் க்ருத்திகா ரெட்டி, ஒரு தோல் நோய் நிபுணர் (Dermatologist). இவர் திடீரென உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டதாகவும், அதன் பிறகு அவரது கணவரால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவசரமாகக் கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அங்குச் சென்ற மருத்துவர்கள், அவர் வருவதற்கு முன்பே இறந்துவிட்டதாக அறிவித்துள்ளனர்.

ஆரம்பத்தில், மாரத்தஹள்ளி காவல் நிலையத்தில், இந்த மரணம் இயற்கைக்கு மாறான மரணமாகப் பதிவு செய்யப்பட்டது. திருமணமான இந்தத் தம்பதியர் இருவரும் விக்டோரியா மருத்துவமனையில் மருத்துவர்களாகப் பணிபுரிந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பவம் நடந்த அவர்களின் வீட்டில், குற்ற நிகழ்வுக் காட்சி அதிகாரி (Scene of Crime Officer - SOCO) ஆய்வு செய்தபோது, சில முக்கியமான ஆதாரங்கள் கிடைத்தன. இதில் இரத்தம் அல்லது மருந்துகளைச் செலுத்தப் பயன்படுத்தப்படும் ஊசி குழாய் அமைப்பு (Cannula set), ஊசி செலுத்தும் குழாய் (injection tube) மற்றும் பிற மருத்துவப் பொருட்கள் ஆகியவை அடங்கும். இவை தடயவியல் சோதனைக்காக (Forensic Analysis) ஒப்படைக்கப்பட்டன.

மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய, உடலின் உள் உறுப்புகளின் மாதிரிகள் (Viscera samples) சேகரிக்கப்பட்டு, தடய அறிவியல் ஆய்வகத்திற்கு (FSL) அனுப்பப்பட்டன. பின்னர் வந்த ஆய்வக அறிக்கை, உயிரிழந்தவரின் உறுப்புகளில் ப்ரோபோஃபால் (Propofol) என்ற சக்திவாய்ந்த மயக்க மருந்து இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இது, நடந்திருப்பது ஒரு குற்றச் செயல் (Criminal Act) என்பதைச் சுட்டிக்காட்டியது.

தடயவியல் அறிக்கையின் அடிப்படையில், உயிரிழந்த டாக்டர் க்ருத்திகாவின் தந்தை, தனது மருமகன் மயக்க மருந்தை பயன்படுத்தித் தன் மகளைக் கொன்றுவிட்டதாக அக்டோபர் 13 அன்று புகார் அளித்தார். புகாரைத் தொடர்ந்து, மாரத்தஹள்ளி காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு, கடலோர கர்நாடகாவின் மங்களூருவுக்கு அருகிலுள்ள பல்கலைக்கழக நகரமான மணிப்பாலில் இருந்த குற்றவாளியை அக்டோபர் 14 அன்று கைது செய்தனர்.

"குற்றவாளி தனது மருத்துவ அறிவைப் பயன்படுத்தி இந்த மரணம் இயற்கையாக நிகழ்ந்தது போல் காட்ட முயன்றிருக்கலாம்," என்று காவல்துறை சந்தேகிக்கிறது.

பெங்களூரு காவல் ஆணையர் சீமந்த் குமார் சிங் இது குறித்துப் பேசுகையில், "இதுவரை சேகரிக்கப்பட்ட சான்றுகள், இக்குற்றத்தில் கணவரின் பங்கைக் குறிக்கின்றன. அவர்தான் மனைவியை மருத்துவமனைக்கு முதலில் கொண்டு வந்தார், ஆனால் என்ன தவறு நடந்தது என்று எதையும் குறிப்பிடவில்லை. அவர் மனைவி உடல்நலக்குறைவால் சிகிச்சையில் இருந்ததாகக் கூறினார். ஆனால், இப்போது அவருக்குச் சக்திவாய்ந்த மயக்க மருந்துகள் செலுத்தப்பட்டது தெரியவந்துள்ளது. இது தவறான உள்நோக்கம் (Malafide Intention) இருந்ததைக் காட்டுகிறது. எனவே இதுகுறித்து தீவிரமாக விசாரிக்கப்பட வேண்டும்," என்று தெரிவித்தார்.

தற்போது கைது செய்யப்பட்ட டாக்டர் மகேந்திர ரெட்டி, காவல்துறைக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும், இந்தக் கொலையை அவர் முன்கூட்டியே திட்டமிட்டாரா என்றும் விசாரணை நடைபெற்று வருகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com