
இந்த 2026 ஆம் ஆண்டு தேர்தல் தமிழக இதுவரை பார்க்காத புதிய தேர்தலாக அமைய உள்ளது. ஒரு பக்கம் திமுக அதன் கூட்டணி கட்சிகளுடனும், அதிமுக பாஜகவின் கூட்டணியிலும், தவெக தன்னிச்சையாகவும் தேர்தல் காலத்தை சந்தித்து மும்முனை போட்டி நிலவும் என்று எதிர்பார்த்த நிலையில் கடந்த மாதம் (செப் 27) கரூரில் விஜய் நடத்திய பிரச்சார கூட்டம் இவற்றை முழுவதுமாக மாற்றி அமைக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக விஜய்யின் பிரச்சார கூட்டத்தின் போது அவரை சந்திக்க ஏராளமான மக்கள் கூடுவது வழக்கம் ஆனால் கரூரில் அளவுக்கு அதிகமான மக்கள் கூடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 42 பேர் உயிரிழந்தனர். இதனைத்தொடர்ந்து விஜய் -ன் அரசியல் செயல்பாடுகள் பல தளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகின்றன.
இந்த சூழலில் நடிகரும் முன்னாள் மத்திய அமைச்சருமான நெப்போலியன் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் விஜய் -யின் செயல்பாடுகள் குறித்து கருத்து தெரிவித்திருந்தார். அதில் “நடிகர்களை நட்சத்திரம் என்று கூறுவது உண்டு..அதனால் தான் தங்கள் மீதான ஈர்ப்பை தக்க வைத்துக்கொள்ள நடிகர்கள் மக்களிடம் இருந்து விலகியே இருப்பார்கள். ஆனால் அரசியல் வாதிகளுக்கு அப்படியில்லை, அவர்கள் முழுக்க முழுக்க மக்களுடனே இருக்க வேண்டும். ஆனால் ஒரு நடிகன் அரசியலுக்கு வருவது ‘மதில் மேல் பூனையை போல’... மக்களிடமிருந்து விலகி இருந்த நீங்கள் மக்களுடனேயே வாழப்போகிறீர்கள், அந்த சமநிலையை காலப்போக்கில் நீங்கள் கற்றுக்கொள்ளலாம், ஆனால் அரசியலுக்கு வருபவர்கள் அதை கற்றுக்கொள்ள தயாராக இருக்கிறார்களா? என்பதுதான் கேள்வியே.
ஆனால் நீங்கள் இன்னும் நடிகர் மனப்பான்மையில் இருந்துகொண்டு, லைட்டை போட்டு போட்டு அணைத்துக்கொண்டு வண்டி மேல கைய ஆட்டிட்டுப்போனா உங்கள யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” என பேசினார்.
அப்போது அவரிடம் இவ்வளவு மக்கள் விஜயை பார்க்க வருகிறார்களே? என கேள்வி எழுப்பப்பட்டது, அதற்கு பதிலளித்த அவர், “எல்லாக்காலத்திலும் நடிகர்களுக்கு கூட்டம் வரும், ஆனால் அவ்வளவு கூட்டத்தையும் கட்டுப்படுத்தி மக்களை பாதுகாக்க கட்சி நிர்வாகிகள் இருப்பர். ரஜினி சார், கமல் சார், விஜயகாந்த் சார் ஏன் எனக்குமே ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வந்தார்கள், அதையெல்லாம் எடுத்து விளம்பரப்படுத்த அப்போது சோசியல் மீடியா இல்லை.
சரி அதிகபட்ச சம்பளம், உச்ச நட்சத்திரம் என்ற புகழ் என எல்லாவற்றையும் விட்டுவிட்டு மக்களுக்காக வந்தேன் என அவர் சொல்கிறாரே, அவர் ஏன் வீடுவீடாக, மக்களுடனேயே பயணிக்கவில்லை. மக்களுடனே இருக்கட்டுமே..பஸ்ஸில் அமர்ந்துகொண்டு, ஒரு பேப்பரை வைத்துக்கொண்டு பேசிவருவது அரசியலே இல்லை. மேலும் அவருக்கு கூட்டத்தை கட்டுப்படுத்தவும் தெரியவில்லை. அரசாங்கம் பாதுகாப்புதான் தரும். அரசியல் எல்லாம் அந்தந்த தலைவர்கள்தான் பழகிக்கொள்ள வேண்டும்.
மேலும் அவருடைய பேச்சில் மக்களுக்கு என்ன செய்வோம் என்று பேசுவதே இல்லை. மக்கள் தேர்வு செய்த முதல்வர், அவரை கிண்டல் செய்வது ஏளனமாக பேசுவது அரசியலுக்கு அழகல்ல… அந்த பதவிக்குத்தான் நீங்கள் ஆசைப்படுகிறீர்கள் அதற்கான தகுதியை வளர்த்துக்கொள்ளுங்கள், “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று வாயால் சொன்னால் மட்டும் போதுமா?அவரின் சுபாவம் திரைத்துறையில் அனைவருக்கும் தெரியும். அவர் யாரிடமும் இறங்கி வந்து பேசமாட்டார். உங்களை பார்க்கத்தான் அவ்வளவு பேரும் வந்துள்ளனர், அந்த மக்கள் மூச்சுத்திணறி, தண்ணீர் இன்றி இறக்கும் தருவாயில் இருக்கும்போது, நீங்கள் உடனடியாக மக்களுடன் நின்றிருக்க வேண்டும், உங்களை நசுக்கிவிடுவார்கள், உங்கள் உயிருக்கு ஆபத்தாகி விடும் என நினைத்தால், உங்களுக்கு எதுக்கு பவுன்சர்ஸ், நீங்க என்ன சாதிச்சிட்டீங்கனு உங்களுக்கு Y -பிரிவு பாதுகாப்பு. பெரிய பெரிய பதவிகளில் உள்ளவர்களுக்குத்தான் அப்படி தருவார்கள். நாங்களும் நடிகர்தான், நாங்களும் இதையெல்லாம் பார்த்துவிட்டுத்தான் வந்திருக்கிறோம். வருடத்திற்கு 2 படம் நடித்து 400 கோடி சம்பாதிக்கிறார், அவர் மக்களுக்கு செய்யவேண்டுமென்றால், எவ்வளவோ செய்திருக்கலாம். அவருக்கு பதவி ஆசைதான் மேலோங்கி உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.