கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே உள்ள டாட்டா நிறுவனத்தின் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் என 1000 கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். நிறுவனத்தின் சார்பாக தொலைதூர பெண் தொழிலாளர்கள் தங்குவதற்கு கட்டப்பட்ட விடுதியின் குளியலறையில் ரகசிய கேமராக்கள் அமைக்கப்பட்டிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்த பெண் தொழிலாளர்கள் கேமராக்களை வைத்தவரை கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதி முன்பு நேற்று மாலை தொடங்கி விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஓசூர் சார் ஆட்சியர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் தொழிலாளர்களிடம் சமாதானம் பேசியும் அவர்கள் கலைந்து செல்லவில்லை, எனவே விசாரணை நடத்தி சந்தேகத்தின் அடிப்படையில் ரகசிய கேமரா வைத்ததாக பீகார் மாநிலத்தை சேர்ந்த பெண் தொழிலாளியான நீலா குமாரி குப்தா (23) என்பவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அதே நேரத்தில் போலீசார் அந்த விடுதியின் குளியல் அறைகளில் ரகசிய கேமராக்கள் ஏதேனும் இருக்கிறதா என மெட்டல் டிடெக்டர் கொண்டு தீவிர சோதனை நடத்தினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பெண் தொழிலாளர்கள் ரகசிய கேமரா அமைத்தவரை கைது செய்ய வேண்டும், விடுதியில் தங்களை டார்ச்சர் செய்யும் வார்டன்களை மாற்ற வேண்டும், வேறு ஏதேனும் இடங்களில் ரகசிய கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளதா என விடுதி முழுவதும் தீவிரமாக சோதனை செய்ய வேண்டும். எங்களது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.
இதனை தொடர்ந்து விடுதி குளியல் அறையில் ரகசிய கேமரா வைத்தது பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நீலா குமாரி குப்தா என்ற பெண் தொழிலாளி தான் என்பது உறுதி செய்யப்பட்டது. எனவே அவரை உத்தனப்பள்ளி போலீசார் கைது செய்துள்ளனர். அவர் வீடியோவை தனது ஆண் நண்பர் மூலம் சமூக வலைத்தளத்தில் பரப்பியதன் அடிப்படையிலேயே விடுதியின் குளியலறையில் கேமரா இருந்த விவகாரம் வெளியில் தெரிந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணும் வட மாநிலத்தைச் சேர்ந்தவர் என கூறப்படுகிறது. அது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட நீலா குமாரி குப்தா கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் இந்த நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார் என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.