"தமிழகத்தையே உலுக்கிய நாகர்கோவில் காசி வழக்கு" - ஆயுள் தண்டனையை உறுதி செய்து அதிரடி தீர்ப்பு வழங்கிய உயர் நீதிமன்றம்

பறிமுதல் செய்யப்பட்ட லேப்டாப்களில் 120 பெண்களின் 400-க்கும் மேற்பட்ட வீடியோ மற்றும் ஆபாச போட்டோக்கள் கைப்பற்றப்பட்டன
Nagercoil Kasi case
Published on
Updated on
2 min read

பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய இளைஞர் காசிக்கு, ஆயுட்காலம் முழுவதும் சிறை தண்டனை விதித்து நாகர்கோவில் நீதிமன்றம் விதித்த தீர்ப்பை உறுதி செய்தது உயர்நீதிமன்றம் மதுரை கிளை. “தேவையில்லாமல் பெண்கள் சமூக ஊடகங்களில் தனிப்பட்ட அந்தரங்க  புகைப்படங்களை பதிவிடுவதை தவிர்க்க வேண்டும்” என்றும் உயர் நீதிமன்றம் கிளை அறிவுறுத்தல்.

நாகர்கோவிலைச் சேர்ந்த காசி  என்பவர் பல பெண்களை திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றி ஆபாச வீடியோ எடுப்பதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார் . பின்னர் அவர்களின் வீடியோ மற்றும் போட்டோவை சமூக வலைத்தளங்களில் வெளியிடப்போவதாக மிரட்டி பணம் பறித்தும் வந்துள்ளார். இவரால் பாதிக்கப்பட்ட நாகர்கோவில், சென்னை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் பலரும் அளித்த புகாரில் 2020-ம் ஆண்டு காசி கைது செய்யப்பட்டார். அவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட லேப்டாப்களில் 120 பெண்களின் 400-க்கும் மேற்பட்ட வீடியோ மற்றும்  ஆபாச போட்டோக்கள் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து, காசி மீது போக்சோ மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. அதையடுத்து சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு வழக்கு மாற்றப்பட்டு, நாகர்கோவில் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, இந்த வழக்கில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தீர்ப்பு வழங்கப்பட்டது.

அந்த வழக்கில் இன்று தண்டனை வழங்கப்பட்டது. அதன்படி இயற்கை மரணம் அடையும் வரை காசிக்கு ஆயுள் தண்டனையும், ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி ஜோசப் ஜாய் தீர்ப்பளித்துள்ளார். இந்த நிலையில், காசி மீது போக்சோ மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கில் விதிக்கப்பட்ட,  மரணம் அடையும் வரை ஆயுள் தண்டனையை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ் , ராமகிருஷ்ணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள் தீர்ப்புக்காக ஒத்திவைத்து இருந்தனர். இந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் நபர்களின் தனிப்பட்ட உரிமையை  பாதுகாப்பது, குற்றவாளிகளை தண்டிப்பது அரசியலமைப்பின் கடமையாகும். மேலும் உயர் நீதிமன்றம் கிளை நீதிபதி இந்த வழக்கு குறித்தும் பெண்கள் பாதுகாப்பு குறித்தும் முக்கிய அறிவுறுத்தலை குறிப்பிட்டனர். அதில், தற்பொழுதைய ஆன் லைன் சமூக ஊடகங்களில், நன்மைகள் இருந்தாலும், இதன் மூலம் பாலியல் ரீதியாக சுரண்டலும் நடைபெறுகிறது. 

இளம் பெண்கள் ஒருவரிடம் எவ்வளவு நம்பிக்கையாக பழகினாலும், தங்களுடைய தனிப்பட்ட புகைப்படங்களை, சமூக ஊடகங்கள் மூலம்  நண்பர்களிடம் பகிரக்கூடாது. இந்த தீர்ப்பானது, தற்பொழுது உள்ள சமூக ஊடக உலகில், பெண்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும். எனவே இந்த தீர்ப்பானது தமிழ்,  ஆங்கிலம்,  இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியிடப்படுகிறது.

அந்தரங்க புகைப்படங்களை வைத்து மிரட்டி இளம் பெண்களை பாலியல் ரீதியாக சுரண்டுவது தொடர்கிறது. இளம் பெண்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். தேவையில்லாமல் சமூக ஊடகங்களில் தனிப்பட்ட அந்தரங்க  புகைப்படங்களை பதிவிடுவதை தவிர்க்க வேண்டும். இந்த வழக்கில் விசாரணை நீதிமன்றம் வழங்கிய தண்டனையில் தலையிட தேவையில்லை. குற்றச்சாட்டு சந்தேகம் இன்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, விசாரணை நீதிமன்றம் வழங்கிய தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டனர். மேலும் மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com