“மகனை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த தந்தை” - உடல் பாகங்களை ஆற்றில் வீசி நாடகம்.. மூன்று ஆண்டுகளுக்கு பின் சிக்கிய பின்னணி!

ஸ்ரீகாந்தை துணியால் கட்டிப்போட்டு, கசாப்புக் கடைகளில் பயன்படுத்தப்படும் அரிவாளால் பாறையின் மீது வைத்து துண்டு துண்டாக...
theni murder accust
theni murder accust
Published on
Updated on
2 min read

தேனி மாவட்டம், அல்லிநகரம் பகுதியைச் சேர்ந்தவர் வேந்தர் பாலா. இவர் ஒரு காலத்தில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தேனி மாவட்ட தலைவராக செயல்பட்டதாகவும், பின்னர் அந்தக் கட்சியில் இருந்து விலகி தற்போது அண்ணாமலையின் இயக்கத்தில் பணியாற்றி வந்ததாகவும் கூறப்படுகிறது. இவருக்கு ராஜலட்சுமி என்ற மனைவியும், ஸ்ரீகாந்த் என்ற மகனும் இருந்தனர். இந்த நிலையில் பாலாவுக்கு அதே பகுதியை சேர்ந்த மற்றொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்ட நிலையில் நாளடைவில் மனைவி மற்றும் மகனை பிரிந்து அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டு தனியாக வாழ்ந்து வந்ததாக சொல்லப்படுகிறது.

இதனால் பொருளாதாரம் இல்லாமல் குடும்பம் நடத்த தவித்த ராஜலட்சுமி மற்றும் அவரது மகன் ஸ்ரீகாந்த், தங்களை கைவிட்டுச் சென்ற பாலா மீது கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளனர். இதன் காரணமாக தந்தை-மகன் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு, அது பலமுறை கைகலப்பாகவும் மாறியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மகன் மீது ஏற்பட்ட விரோதத்தை முடிவுக்கு கொண்டு வர நினைத்த தந்தை பாலா அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி, கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூலை மாதம், "சமாதானமாக பேச வேண்டும்" என்று கூறி ஸ்ரீகாந்தை தேனி அருகே உள்ள வயல்பட்டி பகுதிக்கு வரவழைத்துள்ளார்.

அங்கு ஏற்கனவே பாலாவின் நண்பர்களான அலெக்ஸ் பாண்டியன் மற்றும் கருப்பசாமி ஆகியோர் மறைந்திருந்ததாக கூறப்படுகிறது. மது போதையில் இருந்த மூவரும் சேர்ந்து ஸ்ரீகாந்தை துணியால் கட்டிப்போட்டு, கசாப்புக் கடைகளில் பயன்படுத்தப்படும் அரிவாளால் பாறையின் மீது வைத்து துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்து, பின்னர் உடல் பாகங்களை முல்லைப் பெரியாற்றில் வீசி விட்டு வழக்கம் போல அவர்களது வாழ்க்கையை வாழ்ந்து வந்திருக்கின்றனர்.

river
river Admin

இதற்கிடையில் மகன் வீடு திரும்பாததால், ராஜலட்சுமி தேனி காவல் நிலையத்தில் காணாமல் போனதாக புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது மகன் மாயமான சம்பவத்தில் வேந்தர் பாலாவுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகமடைந்த ராஜலட்சுமி, மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார். அவரது மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்த வழக்கை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றி விசாரணை நடத்த உத்தரவிட்டது.

இதையடுத்து விசாரணையை தீவிரப்படுத்திய தேனி சிபிசிஐடி போலீசார், வேந்தர் பாலா மற்றும் அவரது நண்பர் அலெக்ஸ் பாண்டியனை கைது செய்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது, மகனை திட்டமிட்டு கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசியதை இருவரும் ஒப்புக்கொண்ட நிலையில், இருவரையும் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அழைத்துச் சென்று கொலை எவ்வாறு நடைபெற்றது என்பது குறித்து நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பின்னர் வேந்தர் பாலா மற்றும் அலெக்ஸ் பாண்டியனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த போலீசார், இந்த வழக்கில் தொடர்புடைய தலைமறைவான குற்றவாளி கருப்பசாமியை தீவிரமாக தேடி வருகின்றனர். தான் பெற்ற மகனையே நண்பர்களின் உதவியுடன் தந்தையே துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்து ஆற்றில் வீசிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com