

திருநெல்வேலியை மாவட்டம், சுத்தமல்லி அருகேயுள்ள நரசிங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்லப்பா. இவரது மனைவி 45 வயதுடைய வள்ளியம்மாள். இவர்களுக்கு துர்கா என்ற மகள் உள்ள நிலையில் துர்காவிற்கும் முன்னீர்பள்ளம் காவல் எல்லைக்குட்பட்ட மேலச்செவல் பகுதியைச் சேர்ந்த நடராஜன் என்பவரது மகனான 30 வயதுடைய ஆறுமுகநயினார் என்பவருக்கும் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தற்போது தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், ஆறுமுகநயினார் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டிற்கு வருவதால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுவந்தது. வழக்கம் போல் ஆறுமுகநயினார் நேற்று இரவும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததால் மீண்டும் கணவன் மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது குடிபோதையில் இருந்த ஆறுமுகநயினார், மனைவி துர்காவுடன் சண்டையிட்டு, அவரை அவரது தாய் வீடான நரசிங்கநல்லூர் கொண்டுவந்து விட்டுச் சென்றுள்ளார்.
மகளின் நிலை கண்டு வேதனையடைந்த வள்ளியம்மாள், மருமகன் ஆறுமுகநயினாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கண்டித்ததாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற ஆறுமுகநயினார், இன்று காலை மாமியார் வீட்டிற்கு நேரில் வந்து அங்கு வாசல் தெளித்து கொண்டிருந்த வள்ளியம்மாள் இடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் வள்ளியம்மாள் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தாயின் அலறல் சத்தம் கேட்டு வீட்டுக்குள் இருந்து வெளியே ஓடிவந்த துர்கா, கணவனைத் தடுக்க முயற்சி செய்திருக்கிறார். அப்போது அவரையும் ஆறுமுகநயினார் வெட்டியதில், துர்காவின் தோள்பட்டையில் பலத்தகாயம் ஏற்பட்டது. துர்காவின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீது மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த சுத்தமல்லி காவல்துறையினர், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
உயிரிழந்த வள்ளியம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், தப்பி ஓடிய ஆறுமுகநயினாரை தீவிரமாகத் தேடி, சில மணி நேரங்களிலேயே கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். பட்டப்பகலில் நடந்த இந்த படுகொலைச் சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.