

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை மார்க்கெட் அருகே உள்ள பெரியபாளையம் பகுதியை சேர்ந்தவர் 27 வயதுடைய வெள்ளப்பாண்டி. இவருக்கு சீவலப்பேரி சாலையில் உள்ள நெல்லை திருத்து பகுதியை சேர்ந்த முருகன் என்பவரது மகள் சுதா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. மேலும் வெள்ளப்பாண்டி அதே பகுதியில் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். குடிப்பழக்கம் உடைய வெள்ளப்பாண்டி காலப்போக்கில் அதற்கு அடிமையாகி தினந்தோறும் குடித்து விட்டு வீட்டிற்கு சென்றிருக்கிறார்.
இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. வெள்ள பாண்டியன் சமீபத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் தீபாவளிக்கு முன்தினம் ஜாமினில் வெளியில் வந்தார். ஜாமினில் வந்த வெள்ளப்பாண்டி வீட்டிற்கு சென்று பார்த்த போது அங்கு தனது மனைவி இல்லை என்பதால் சுதாவை பற்றி அவரது தம்பியான 20 வயதுடைய பெருமாளிடம் விசாரித்துள்ளார்.
இதற்கிடையே சுதா வெள்ளப்பாண்டியின் கொடுமை தாங்க முடியாது என முடிவு செய்து தனியாக வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்திருக்கிறார். அந்த வீட்டிற்கு சென்ற வெள்ளப்பாண்டி அங்கிருந்த பொருட்களை அடித்து உடைத்து சேதப்படுத்தி இருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த சுதாவின் தம்பி பெருமாள் வெள்ளப்பாண்டியிடம் தகராறு செய்ததாக சொல்லப்படுகிறது. இதனால் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்த நிலையில் தற்போது வெள்ளை பாண்டியனுக்கும் பெருமாளுக்கும் இடையேயான தகராறு மேலும் முற்றியது.
இந்நிலையில் இன்று அதிகாலை வீட்டில் இருந்த பெருமாளை மது குடிக்க செல்வதற்காகவும், சமாதானம் பேசுவதற்காகவும் செல்போனில் வெள்ளபாண்டி அழைத்துள்ளார். அதை நம்பி பெருமாளும் அவருடன் புறப்பட்டு சென்ற நிலையில் தொடர்ந்து வெள்ளப்பாண்டி, அவரது நண்பரான பெரியபாளையம் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய மதுபாலன் மற்றும் பெருமாள் ஆகிய 3 பேரும் மேல பாட்டம் பகுதியில் உள்ள கல்வெட்டான் குழி பகுதியில் மது குடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்படவே கைகலப்பாக மாறியது. தொடர்ந்து வெள்ளை பாண்டி ஆத்திரமடைந்து தனது லுங்கியால் பெருமாளை கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் கல்வெட்டான் குழியில் உடலை வீசி விட்டு அங்கிருந்து வெள்ளபாண்டியும், மதுபாலனும் தப்பி சென்று விட்டனர். தகவல் அறிந்த பாளையங்கோட்டை தாலுகா போலீசார் உடனடியாக வெள்ள பாண்டியை கைது செய்தனர். பின்னர் அவர் கொடுத்த தகவலின் பெயரில் 400 அடி ஆழம் கொண்ட கல்வெட்டான் குழியில் மூழ்கிய பெருமாள் உடலை பாளையங்கோட்டை தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் மீட்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.
