

திருவள்ளூர் மாவட்டம், திருமுல்லைவாயில் அயப்பாக்கம் எம் ஜி ஆர் புறம் இந்திரா தெருவை சேர்ந்தவர் சேகர் என்பவரின் மகன் 34 வயதுடைய சதீஷ்குமார். இவர் அயப்பாக்கத்தில் சரவணா என்ற பெயரில் பர்னிச்சர் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர், திருமுல்லைவாயில் மாசிலாமணீஸ்வரர் நகரை சேர்ந்த 29 வயதுடைய சுந்தரி என்பவரை கடந்த சில வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இருவரும் தனியாக வீடு எடுத்து வசித்து வந்திருக்கின்றனர்.
திருமணமான சில மாதங்களுக்கு பின்னர், சுந்தரியை மொபைல் போனில் தொடர்பு கொண்ட சதீஷ் குமாரின் தந்தை சேகர் “என் மகனுக்கு நாங்கள் திருமணம் செய்து வைத்து இருந்தால் பணம் நகை கிடைத்து இருக்கும் காதல் திருமணம் செய்ததால் எதுவும் கிடைக்கவில்லை” என அவதூறாக பேசி, மிரட்டி மாதந்தோறும் பணம் பறித்து வந்ததாக சொல்லப்படுகிறது. அதேபோன்று சதீஷ்குமாரும் சுந்தரியிடம் இருந்து நிறைய பணத்தை பெற்றதாகவும் , சதீஷ் குமார் அடிக்கடி பெற்றோர் வீட்டுக்கு சென்று அங்கேயே தங்கி விடுவதையும் வழக்கமாக வைத்திருந்திருக்கிறார்.
இதுகுறித்து, சுந்தரி, சதீஷ் குமாரிடம் கேட்ட போது, அவரை அடித்து உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கொடுமைப்படுத்தி வந்துள்ளார். மேலும் சதீஷ் குமாருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாக கூறிய அவரது மனைவி , கடந்த சில மாதங்களாக பெற்றோர் சம்மதத்துடன் சதீஷ்குமார் வேறு பெண்ணுடன் வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்தார். இதுகுறித்து ஆவடி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்த போது, இருவரையும் பேசி சமாதானம் செய்து அனுப்பி வைத்ததாக சொல்லப்படுகிறது. தம்பதிக்கு ஏற்பட்ட குடும்ப பிரச்சனையால் மன உளைச்சலுக்கு ஆளான சுந்தரி, மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்று தீவிர சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பியுள்ளனர்.
இதையடுத்து, திருமணம் செய்து தன்னை அடித்து துன்புறுத்தி பணத்தை பறித்து ஏமாற்றிய கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில் புகார் அளித்த நிலையில் கமிஷனர் சங்கர் உத்தரவுப்படி, (நவ. 21) ஆம் தேதி எப்.ஐ.ஆர். பதிவு செய்த ஆவடி அனைத்து மகளிர் போலீசார், நேற்று முன்தினம் இரவு கள்ளிக்குப்பம் பகுதியில் வேறு ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்த சதீஷ்குமாரை கைது செய்தனர். பின்னர் விசாரணை மேற்கொண்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.