
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே அருங்குளம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் திருத்தணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் 700 க்கும் மேற்பட்டோர் 6 முதல் 12 வகுப்பு வரை படித்து வருகின்றனர். பள்ளிக்கு காலை நேரங்களில் சீக்கிரம் வரும் மாணவர்கள் வகுப்புகள் தொடங்கும் வரை பள்ளி வழக்கத்தின் மைதானத்தில் விளையாடுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.
வழக்கம் போல் இன்று காலை பள்ளிக்கு சீக்கிரமாக வந்த ஒன்பதாம் வகுப்பை சேர்ந்த தருண் குமார் என்ற மாணவன். அவரது நண்பர்கள் மற்றும் வேறு வகுப்பை சேர்ந்த 14 வயதுடைய ராகவேந்திரா என்ற மாணவனுடன் சேர்ந்து ஒன்றாக கபடி விளையாடி உள்ளனர். அப்போது தருண் குமாருக்கும், ராகவேந்திராவிற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. உடனிருந்த சக நண்பர்கள் அவர்களை விலக்கி விட்டு சமாதானம் செய்துள்ளனர்.
பின்னர் ராகவேந்திரனை கழிவறைக்கு அழைத்து சென்ற தருண் குமார் அவரை சரமாரியாக தாக்கி கடித்து காயப்படுத்தியுள்ளார். மேலும் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராகவேந்திராவை கை, கால்கள் உள்ளிட்ட பகுதிகளில் ஆழமாக குத்தி கிழித்து விட்டு அப்பகுதியில் தப்பிச்சென்றார். பின்னர் வலியில் அலறிய மாணவனின் குரல் கேட்டு கழிவறைக்கு சென்ற மற்ற மாணவர்கள் இது குறித்து ஆசிரியர்களிடம் தெரிவித்தனர்.
பின்னர் தாமதிக்காமல் திருத்தணி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு மாணவனை ஆசிரியர்கள் இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்று தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள் ஆழமான முறையில் கத்தியில் கிழிக்கப்பட்டுள்ளதால் மாணவனுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட மாணவன் ராகவேந்திராவின் தந்தை ராஜசேகர் மருத்துவமனைக்கு வரவழைக்கப்பட்ட நிலையில் அவர் தனது மகனை தாக்கிய பள்ளி மாணவன் தருண் குமார் மீது காவல் துறையில் புகாரளித்துள்ளார். இதனை தொடர்ந்து போலீசார் அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசு பள்ளியில் மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் கத்தியைக் கொண்டு கிழித்துக் கொண்ட சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.