தூத்துக்குடி மாவட்டம் முதலூரில் காதல் விவகாரத்தில் ஏற்பட்ட ஆத்திரத்தால், வீட்டுக்குள் புகுந்து குடும்பத்தினரை அரிவாளால் வெட்டித் தாக்கிய இளைஞர், பெண்ணைக் கொலை செய்ததுடன், அவரது இரண்டு மகள்களையும் கடத்திச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைமறைவாக இருந்த இளைஞரைப் போலீசார் கைது செய்த நிலையில், கடத்தப்பட்ட இரண்டு சிறுமிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள முதலூரைச் சேர்ந்தவர் 50 வயதுடைய முத்துக்கிருஷ்ணன். இவரது மனைவி 48 வயதுடைய மேரி விஜிலா. இந்தத் தம்பதியினருக்கு பிளஸ்ஸி, பிரின்ஸா பாப்பா என்ற இரண்டு மகள்களும் பிளஸெட் ராஜா என்ற மகனும் உள்ளனர்.
இந்நிலையில், முத்துக்கிருஷ்ணனின் மகளுக்கும், ஆனந்தபுரத்தைச் சேர்ந்த பரோட்டா மாஸ்டரான 22 வயதுடைய ஞானபிரகாஷ் என்பவருக்கும் பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இவர்களது பழக்கத்திற்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால், கடந்த ஒரு வாரமாக அந்தப் பெண் ஞானபிரகாஷிடம் பேசுவதை நிறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஞானபிரகாஷ், இன்று(அக் 23) அதிகாலை முத்துக்கிருஷ்ணனின் வீட்டுக்குள் புகுந்து, அங்கிருந்தவர்களை அரிவாளால் சரமாரியாகத் தாக்கி உள்ளார். இந்தத் தாக்குதலில் மேரி விஜிலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் முத்துக்கிருஷ்ணன் மற்றும் அவரது மகன் பிளஸெட் ராஜா ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
இதையடுத்து, காயமடைந்த இருவரும் சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு இருவரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே, தாக்குதலை நடத்திய ஞானபிரகாஷ், முத்துக்கிருஷ்ணனின் இரண்டு மகள்களையும் மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவரைப் பிடிக்க டி.எஸ்.பி. தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
விசாரணையில், ஆனந்தபுரத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்த பழங்குளத்தைச் சேர்ந்த ஞானபிரகாஷின் வீட்டில் கடத்தப்பட்ட இரண்டு சிறுமிகளும் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அங்கு சென்ற போலீசார் இரண்டு சிறுமிகளையும் பாதுகாப்பாக மீட்டனர். மேலும், ஞானபிரகாஷின் தாயையும் விசாரணைக்காகக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த ஞானபிரகாஷை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். காதல் விவகாரத்தில் ஏற்பட்ட ஆத்திரத்தால் வீட்டுக்குள் புகுந்து பெண்ணைக் கொலை செய்ததுடன், குடும்பத்தினரைக் கடுமையாகத் தாக்கி, இரண்டு சிறுமிகளைக் கடத்திச் சென்ற சம்பவம் முதலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.