

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே கள்ளத்தொடர்பு விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் பெண்ணுக்கு மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்ததாக கூறப்படும் சம்பவத்தில், சுமார் 45 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள சால்நாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ். இவரது மனைவி குருவலட்சுமி (35). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த சண்முகவேலின் மகன் சின்ன கெங்குராஜ் (47) என்பவர் மனைவியைப் பிரிந்து தனியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது. சிலகாலமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துகொண்டிருந்தார் குருவலட்சுமி. இந்நிலையில், குருவலட்சுமிக்கும் சின்ன கெங்குராஜுக்கும் கடந்த சுமார் 5 ஆண்டுகளாக திருமணத்தை மீறிய நெருங்கிய தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க, சில காலமாக கணவரை விட்டு பிரிந்து இருந்த குருவலட்சுமி, தனது குழந்தைகள் வளர்ந்த நிலையில் மீண்டும் கணவருடன் சேர்ந்து குடும்பமாக வாழத் தொடங்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சின்ன கெங்குராஜ், தொடர்ந்து குருவலட்சுமியிடம் தகராறு செய்து வந்துள்ளார். மேலும் , சின்ன கெங்குராஜ் குருவலட்சுமியை தன்னுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்குமாறு வற்புறுத்திவந்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி காலை சுமார் 9 மணியளவில், குருவலட்சுமியின் வீட்டிற்கு சின்ன கெங்குராஜ் சென்றுள்ளார். அப்போது தன்னுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்குமாறு குருவலட்சுமியை வற்புறுத்தி தகராறில் ஈடுபட்டுள்ளார். இதுமட்டுமின்றி, ஆபாசமாக பேசியதுடன் குருவலட்சுமியை கையால் கடுமையாக தாக்கியுள்ளார்.
இருவருக்குமிடையே தகராறு முற்றிய நிலையில், ஆத்திரத்தில் சின்ன கெங்குராஜ் குருவலட்சுமி மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துள்ளார். இதில், குருவலட்சுமியின் சேலை தீப்பற்றி எரிந்துள்ளது. இதனால் குருவலட்சுமியின் முதுகு, கைகள் மற்றும் வயிற்றுப் பகுதிகளில் சுமார் 45 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தை அறிந்தவர்கள் உடனடியாக குருவலட்சுமியை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட குருவலட்சுமிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக சின்ன கெங்குராஜை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ஆகஸ்ட் 10-ம் தேதி நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார்.
இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குருவலட்சுமியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்து வந்த நிலையில் அவர் மரண வாக்குமூலம் அளித்துள்ளார். இந்நிலையில், சுமார் 45 சதவீத தீக்காயங்களுடன் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குருவலட்சுமி, ஆகஸ்ட் 16-ம் தேதி இரவு சுமார் 9 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும் குருவலட்சுமியின் உயிரிழப்பை தொடர்ந்து, ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.
மேலும், இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறுக்கான காரணம், சம்பவம் நடந்தபோது வேறு யாரேனும் அங்கு இருந்தார்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களிலும் தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குருவலட்சுமிக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், அவர் உயிரிழந்த சம்பவம் அந்த குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளாக இருந்ததாக கூறப்படும் கள்ளத்தொடர்பு, குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றம் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட தகராறு இறுதியில் ஒரு பெண்ணின் உயிரிழப்பில் வந்து முடிந்துள்ளது. இந்த சம்பவம் சால்நாயக்கன்பட்டி மற்றும் ஓட்டப்பிடாரம் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்