“திருமணமான மறுநாளே வீட்டில் இறந்து கிடந்த சிசு!” - கழிவறையில் படிந்து கிடந்த ரத்தம்.. புதுமணப்பெண் மறைத்த ரகசியம்!

வீட்டின் கழிவறையில் அதிக அளவில் ரத்தம் இருந்ததைக் கண்டு சந்தேகமடைந்த வெங்கடேஷின் அக்காள்...
Tirunelveli Newlywed Pregnancy Case
Tirunelveli Newlywed Pregnancy Case
Published on: 
Updated on: 
2 min read

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை அருகே திருமணமான மறுநாளே புதுமணப்பெண்ணுக்கு வயிற்று வலி மற்றும் ரத்தப்போக்கு ஏற்பட்ட நிலையில், வீட்டின் படிக்கட்டுப் பகுதியில் சிசு இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணத்திற்கு முன்பே சுமார் 5 மாத கர்ப்பமாக இருந்ததை மறைத்து ஏமாற்றித் திருமணம் செய்ததாகக் கணவர் அளித்த புகாரின் பேரில், புதுமணப்பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். நெல்லை, பாளையங்கோட்டை தாலுகா, அரியகுளம் லைன் தெருவைச் சேர்ந்த செல்லையாவின் மகன் 25 வயதுடைய வெங்கடேஷ். கொத்தனார் வேலை செய்து வரும் இவருக்கும், தாழையூத்து அருகே உள்ள ஏரான்குடிபாலத்தைச் சேர்ந்த பால்துரையின் மகள் பிச்சம்மாளுக்கும் கடந்த (ஜூன் 29)ஆம் தேதி இரு வீட்டுப் பெரியோர்கள் முன்னிலையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து, கடந்த (நவ 13)-ம் தேதி சாந்தி நகர் மணிக்கூண்டு அருகே உள்ள பிள்ளையார் கோயிலில் பெரியோர்கள் முன்னிலையில் திருமணச் சடங்குகள் நடைபெற்றன. பின்னர், சீவலப்பேரி ரோடு மணிக்கூண்டு அருகே உள்ள திருமண மண்டபத்தில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்ததும் அன்றிரவே மணமக்கள் அரியகுளத்தில் உள்ள வெங்கடேஷின் வீட்டிற்குச் சென்றனர். இந்நிலையில், மறுநாள் (நவ 14) ஆம் தேதி அதிகாலை பிச்சம்மாளுக்குத் திடீரென கடுமையான வயிற்று வலி மற்றும் இரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. வீட்டின் கழிவறையில் அதிக அளவில் ரத்தம் இருந்ததைக் கண்டு சந்தேகமடைந்த வெங்கடேஷின் அக்காள், பிச்சம்மாளிடம் விசாரித்துள்ளார்.

அப்போது, பிச்சம்மாள் தனக்கு வயிற்று வலி இருப்பதாக தெரிவித்த நிலையில், அச்சமடைந்த வெங்கடேஷும் அவரது அக்காளும் பிச்சம்மாளை உடனடியாக பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளனர். இதற்கிடையே, வெங்கடேஷின் வீட்டின் படிக்கட்டுப் பகுதியில் சிசு ஒன்று இறந்த நிலையில் கிடப்பதாக அவருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த வெங்கடேஷ், உடனடியாக வீட்டிற்குச் சென்று பார்த்தபோது சிசு இறந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து, தனது மனைவி பிச்சம்மாள் திருமணத்திற்கு முன்பே சுமார் 5 மாத கர்ப்பமாக இருந்திருக்கலாம் என்றும், இந்த உண்மையைத் தன்னிடமும் தனது குடும்பத்தினரிடமும் மறைத்து திருமணம் செய்து வைத்துள்ளதாகவும் வெங்கடேஷ் சந்தேகமடைந்துள்ளார்.

இந்த விவரத்தை முன்கூட்டியே தெரிவித்திருந்தால் திருமணத்திற்கு சம்மதித்திருக்க மாட்டேன் எனக் கூறிய அவர், உரிய விசாரணை நடத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரி நெல்லை தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் நெல்லை தாலுகா போலீசார் நம்பிக்கை மோசடி மற்றும் கருச்சிதைவு ஏற்படுத்துதல் ஆகிய இரண்டு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போலீசார், பிச்சம்மாளைக் கைது செய்துள்ளனர். திருமணமான மறுநாளே வீட்டில் சிசு இறந்து கிடந்ததும், திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக இருந்ததை மறைத்ததாகக் கணவர் புகார் அளித்துள்ளதும் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.