“திருமண மண்டபத்தில் இரட்டை கொலை” - கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த தாக்குதல்.. அலமேலு மங்காபுரத்தில் பரபரப்பு!

திருமண நிகழ்ச்சிக்கு சுனில் வருவதாக சம்பூர்ணம்மாவுக்கு தகவல் கிடைத்துள்ளது...
THIRUPATHI DOUBLE MURDER
THIRUPATHI DOUBLE MURDER
Published on
Updated on
2 min read

ஆந்திர மாநிலம் திருப்பதி ஜீவகோனா பகுதியைச் சேர்ந்த முனிரத்னம் ரெட்டி. மற்றும் சுப்பாரெட்டி நகரைச் சேர்ந்தவர் மணிகண்டா, ஆகிய இருவரும் உறவினர்களாகவும், குடும்ப நண்பர்களாகவும் இருந்து வந்துள்ளனர். திருமலையில் பணிபுரியும் சம்பூர்ணம்மா என்பவரின் குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அவர்கள், அவரது மகளின் திருமணத்திலும் முக்கிய பங்கு வகித்ததாக கூறப்படுகிறது. சம்பூர்ணம்மாவின் மகள் சுனில் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், கடந்த சில மாதங்களாக கணவன்-மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்த குடும்பப் பிரச்சனையில் சம்பூர்ணம்மா தரப்புக்கு ஆதரவாக முனிரத்னம் ரெட்டி மற்றும் மணிகண்டா செயல்பட்டு வந்திருக்கின்றனர். எனவே இருவரும் சுனிலை சந்தித்து சமாதானம் பேச முயற்சித்து வந்த நிலையில் சுனில் இவர்களிடம் பேசுவதை தவிர்த்து வந்திருக்கிறார். இந்த நிலையில், திருச்சானூர் சாலையில் உள்ள பத்மாவதி கல்யாண மண்டபத்தில் புதன்கிழமை இரவு நடைபெற இருந்த திருமண நிகழ்ச்சிக்கு சுனில் வருவதாக சம்பூர்ணம்மாவுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அவர் அந்த தகவலை முனிரத்னம் ரெட்டி மற்றும் மணிகண்டாவிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து இருவரும் அந்த திருமண மண்டபத்திற்கு சென்று சுனிலிடம் பேசியுள்ளனர். அப்போது, மனைவியை பிரிந்து வாழ்ந்துவிட்டு வேறு திருமண நிகழ்ச்சிகளுக்கு வருவது குறித்து இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், சுனிலுக்கு ஆதரவாக அவரது உறவினர்கள் வாக்குவாதம் செய்திருக்கின்றனர். அப்போது ஆத்திரமடைந்த சுனில் மற்றும் அவரது தரப்பினர், மறைத்து வைத்திருந்த கத்திகளை எடுத்து முனிரத்னம் ரெட்டி மற்றும் மணிகண்டாவை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் முனிரத்னம் ரெட்டி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்ததை தொடர்ந்து, பலத்த காயமடைந்த மணிகண்டா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

marriage hall.
marriage hall.Admin

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கிழக்கு துணைக் காவல் கண்காணிப்பாளர் பக்தவத்சலம், ஆய்வாளர்கள் ஸ்ரீனிவாசுலு, ராமகிருஷ்ணா மற்றும் போலீசார் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணையை தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில், குடும்பத் தகராறு மற்றும் திருமண விவகாரமே இந்த இரட்டைக் கொலைக்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது. மேலும், கொலையாளிகள் அனைவரும் ஏர்பேடு மண்டலம் ஜங்காலபல்லி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டது.

சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், திருப்பதி நகரின் எல்லைகளை உடனடியாக மூடி வாகன சோதனையை தீவிரப்படுத்தினர். இதன் அடிப்படையில், கொலை செய்துவிட்டு தப்பியோட முயன்ற முதன்மைக் குற்றவாளி சுனில் மற்றும் அவரது உறவினர்களை போலீசார் அதிரடியாக கைது செய்து அவர்களிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் நடைபெறவிருந்த கல்யாண மண்டபம் அருகே கண் இமைக்கும் நேரத்தில் அரங்கேறிய இந்த இரட்டைக் கொலை சம்பவம் அங்கு கூடியிருந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.மேலும் இந்த கொடூரத் தாக்குதலின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com