“நீங்களே இப்படி செய்யலாமா?” - பள்ளியில் வைத்து மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. ஓவிய ஆசிரியர் மதன்குமார் கைது!

பள்ளியில் அடிக்கடி சிறுமிகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார்...
Tiruppur Udumalpet POCSO Case
Tiruppur Udumalpet POCSO Case
Published on
Updated on
1 min read

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே கொமரலிங்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், அப்பள்ளியில் பணியாற்றி வந்த ஓவிய ஆசிரியர் மதன்குமார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் உடுமலை மற்றும் கொமரலிங்கம் பகுதிகளில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடுமலை அருகே கொமரலிங்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணியாற்றி வந்தவர் மதன் குமார். இவர் பள்ளியில் அடிக்கடி சிறுமிகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார்.

இதனால் அச்சமடைந்த மாணவிகள் கடந்த ஜூன் மாதம், ஓவிய ஆசிரியர் மதன்குமார் தவறாக நடந்து கொண்டது குறித்து அவரது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து மாணவிகள் தெரிவித்த தகவலின் அடிப்படையில், பள்ளி நிர்வாகம் முதற்கட்ட விசாரணை மேற்கொண்டது. பின்னர், இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்துக்கு பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவித்தது.

இதையடுத்து, மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் பள்ளிக்கு நேரில் சென்று, சம்பந்தப்பட்ட மாணவிகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். அப்போது, ஓவிய ஆசிரியர் மீது பாலியல் தொந்தரவு தொடர்பான குற்றச்சாட்டுகளை மாணவிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில், பள்ளித் தலைமையாசிரியர் உடுமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தார். தலைமையாசிரியர் அளித்த புகாரின் அடிப்படையில், உடுமலை அனைத்து மகளிர் போலீசார் ஓவிய ஆசிரியர் மதன்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

தொடர்ந்து, மதன்குமாரை கைது செய்த போலீசார் அவரை உடுமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதியின் உத்தரவின்படி அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மாணவிகள் பாதுகாப்பாக கல்வி பயில வேண்டிய பள்ளியில், ஆசிரியர் ஒருவர் மீது பாலியல் தொந்தரவு குற்றச்சாட்டு எழுந்து, அவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சம்பவம் உடுமலை மற்றும் குமரலிங்கம் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com