திருப்பூர் மாவட்டம், அவிநாசி அடுத்த குன்னத்தூர் அருகே உள்ள தேவாலய வளாகத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை மாணவ மாணவிகள் படிக்கும் அரசு உதவி பெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அவிநாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 300 க்கும் மேற்பட்ட மாணவர்கள் அந்த பள்ளியில் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளிக்கு தேவாலய பாதிரியாராகவும், பள்ளியின் தாளாளராகவும் பணியாற்றி வருபவர் கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியைச் சேர்ந்த திவ்யநாதன் என்பவரின் மகன் 57 வயதுடைய ராபர்ட்.
இவர் அவ்வப்போது மாணவர்களுக்கு பாடம் எடுப்பது வகுப்பறைகளில் கண்காணிப்பில் ஈடுபடுவது போன்ற வேலைகளையும் செய்து வந்த நிலையில் சிறுமிகளிடம் தவறாக பேசி பாலியல் சீண்டலில் ஈடுபட்டிருக்கிறார். மாணவிகள் இது குறித்து யாரிடம் தெரிவிப்பது என்று தெரியாமல் அமைதியாக இருந்துள்ளனர். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட ராபர்ட் தொடர்ந்து மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு அத்துமீறி இருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமிகள் நடந்தது குறித்து அவரது பெற்றோர்களிடம் தெரிவித்திருக்கின்றனர்.
சிறுமிகள் சொன்னதை கேட்டு ஆத்திரமடைந்த பெற்றோர்கள் சிலர் நேற்று முன்தினம் அவசர போலீஸ் எண் நூறுக்கு அழைத்து தாளாளராக உள்ள பாதிரியார் ராபர்ட் மாணவிகளை பாலியல் ரீதியாக தொடுதல் போன்ற செய்கைகள் செய்வதாக புகாரளித்தனர். புகாரின் அடிப்படையில் குன்னத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் சுசீலா மற்றும் குழந்தைகள் நல அலுவலர் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பள்ளியின் தாளாளர் பாலியல் ரீதியாக குழந்தைகளை துன்புறுத்தியது தெரியவந்தது.
இதனை அடுத்து குன்னத்தூர் போலீசார் அவிநாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்த நிலையில் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட அவிநாசி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சாந்தி பாதிரியார் ராபர்ட் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருப்பூர் சிறையில் அடைத்தனர். தேவாலயத்தில் பாதிரியாராக இருந்தவர் சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.