திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே 3 வயது சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட வடமாநில கூலித்தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஹிமாச்சல பிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டம் நாதோன் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ்சந்த் என்பவரது மகன் 48 வயதுடைய தேசுராஜ். இவர் குடும்பத்துடன் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா பில்லாந்தாங்கல் கிராமத்தில் தங்கி, சாலை அமைக்கும் பணியில் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
கடந்த 2025 ஆம் ஆண்டு (ஜனவரி 21) ஆம் தேதி காலை, அதே கிராமத்தைச் சேர்ந்த 3 வயது சிறுமி தனது பாட்டியுடன் பால் வாங்குவதற்காக சென்றுள்ளார். பால் வாங்கி கொண்டு திரும்பும்போது சிறுமி அங்குள்ள தனது நண்பர்களுடன் விளையாடி நிலையில் பாட்டி மட்டும் வீட்டிற்கு திரும்பியதாக சொல்லப்படுகிறது. பின்னர் சிறுமி நீண்ட நேரமாகியும் சிறுமி வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த சிறுமியின் தாய், அவரை பல்வேறு இடங்களில் தேடியுள்ளார். அப்போது, தேசுராஜ் தங்கியிருந்த வீட்டில் இருந்து சிறுமி அழுதபடி வெளியே வந்ததை அவரது தாய் பார்த்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த தாய் குழந்தையை தூக்கி பார்த்த போது சிறுமியின் உடலில் காயங்கள் இருந்ததால், அவரிடம் விசாரித்துள்ளார். அப்போது தேசுராஜ் சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது தெரியவந்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல் வேகமாக பரவிய நிலையில் அப்பகுதி மக்கள் தேசுராஜை பிடித்து சரமாரியாக தாக்கி செய்யாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தேசுராஜை கைது செய்தனர்.
இந்த வழக்கு திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் செயல்பட்டு வரும் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி காஞ்சனா, குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேசுராஜுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். தீர்ப்பைத் தொடர்ந்து, போலீசார் தேசுராஜை பாதுகாப்புடன் அழைத்துச் சென்று வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்