யார் பெரியவர் என்ற போட்டியால் விபரீதம்: இளைஞரை வெட்டி வீசிய நண்பர்கள்.. ..!

யார் பெரியவர் என்ற போட்டியால் விபரீதம்:   இளைஞரை வெட்டி வீசிய நண்பர்கள்.. ..!
Published on
Updated on
1 min read

திண்டுக்கல் மாவட்டம் பெத்தய கவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் அழகுபாண்டி. 26 வயதான இவர் செட்டிநாயக்கன்பட்டியில் உள்ள வெல்டிங் பட்டறையில் வேலை பார்த்து வருகிறார். 

இந்நிலையில் 9-ம் தேதியன்று திண்டுக்கல் - பழனி சாலையில் உள்ள பெட்ரோல் பங்குக்கு சென்ற அழகுபாண்டியை சுற்று போட்ட 2 பேர் அரிவாளால் சரமாரியாக வெட்டி வீசி விட்டு தப்பியோடினர். 

முகத்தில் கடுமையாக வெட்டப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்த அழகுபாண்டியை கண்ட பொதுமக்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்தனர். இதுகுறித்து சம்பவ இடத்துக்கு விரைந்த திண்டுக்கல் மேற்கு போலீசார் கொலை குறித்து விசாரணையில் இறங்கியபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.  

அழகுபாண்டி வேலை செய்த வெல்டிங் பட்டைறையின் உரிமையாளருக்கு கடந்த 7-ம் தேதி பிறந்தநாள் விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் உடன் வேலை பார்த்து வந்த கே.குரும்பப் பட்டியைச் சேர்ந்த அசோக்குமார், மகேந்திரன் ஆகிய 2 பேரும் அழகுபாண்டியுடன் சேர்ந்து மதுஅருந்தியுள்ளனர். 

அப்போது தங்களில் யார் பெரியவர் என கேட்டபோது மூவருக்கும் இடையே தகராறு எழுந்துள்ளது. இந்த ஈகோ பிரச்சினையால் 7-ம் தேதியன்று கலைந்து போன அசோக்குமாரும், மகேந்திரனும் அழகுபாண்டிக்கு குறி வைத்தனர். 

அதன்படி முருகபவனம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்-கில் அழகுபாண்டி நிற்பதை கண்ட இருவரும் அவரிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது எழுந்த தகராறில் ஆத்திரமடைந்த அசோக்குமார் கத்தியை எடுக்க, மகேந்திரன் அரிவாளை எடுக்க இதைப் பார்த்து அதிர்ந்த அழகுபாண்டி ஓட்டமெடுக்க முயன்றார். 

ஆனால் சுதாரித்துக் கொண்ட இருவரும், அழகுபாண்டியை வண்டியில் இருந்து காலை எடுத்து வைப்பதற்கு முன்பே முகத்தை சரமாரியாக வெட்டி வீசி விட்டு தப்பியோடினர். 

பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது யார் பெரியவர் என்ற மோதலில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டது திண்டுக்கல் மக்களை திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com