“சொந்த நிலத்தில் கொல்லப்பட்ட தாசில்தார்” - தகாத வார்த்தைகள் பேசியதால் ஆத்திரம்.. தந்தையால் குற்றவாளியான மகன்கள்!

தண்ணீர் பாய்ச்சிய போது பயிர்களுக்கு தண்ணீர் செல்லாத வகையில் கற்களை வைத்து அடைத்ததாக...
subramani
subramani
Published on
Updated on
2 min read

திருச்சி மாவட்டம், தாயனூர் மேல தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி. அதே பகுதியில் தாசில்தாராக பணிபுரிந்து வந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு வயது மூப்பு காரணமாக ஓய்வு பெற்ற நிலையில் அதிலிருந்து வந்த பணத்தை வைத்து தாயனூர் குஞ்சாயி அம்மன் கோயில் நிலமான சுமார் 8 ஏக்கர் நிலத்தில் உள்ள இரண்டு ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து பயிர்களை சாகுபடி செய்து வந்திருக்கிறார். அதே 8 ஏக்கர் நிலத்தில் இரண்டு ஏக்கர் போக மீதமுள்ள நிலத்தில் கோயில் மருளாளி அசோக்குமாரும், இன்பராஜ் என்பவரும் விவசாயம் செய்து வந்துள்ளனர்.

இதில் நிலத்தகராறு தொடர்பாக சுப்பிரமணிக்கும், அசோக்குமாருக்கும் மதுரை கிளை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை சுப்பிரமணி வயல்காட்டில் வேலை செய்து கொண்டிருந்த போது அசோக்குமாரின் நிலத்திற்கு செல்லும் வாய்களை தண்ணீர் பாய்ச்சிய போது பயிர்களுக்கு தண்ணீர் செல்லாத வகையில் கற்களை வைத்து அடைத்ததாக சொல்லப்படுகிறது. இதனால் சுப்பிரமணிக்கும் அசோக் குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

surya, ashok kumar,tamil selvan
surya, ashok kumar,tamil selvan

இதை அறிந்து நிலத்திற்கு சென்ற அசோக்குமாரின் மகன்களான தமிழ்செல்வன் மற்றும் சூர்யா இருவரும் சேர்ந்து சுப்ரமணியுடன் தகராறு செய்திருக்கின்றனர். அப்போது சுப்பிரமணி அசோக் குமார் மற்றும் அவரது மகன்களை தகாத வார்த்தைகளால் திட்டியதாக சொல்லப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த அசோக்குமார் சுப்ரமணியை மண்வெட்டியால் சரமாரியாக தாக்கியுள்ளார் மேலும் தமிழ்செல்வன் மற்றும் சூர்யா அவரை கத்தி மற்றும் அரிவாள் பயன்படுத்தி சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். தகவலறிந்த துணை காவல் கண்காணிப்பாளர் கதிரவன் மற்றும் சோமரசம்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

மேலும் அங்கு உயிரிழந்து கிடந்த சுப்பிரமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் விசாரணை இன்று திருச்சி - தோகைமலை மெயின் ரோட்டில் வைத்து தந்தை மற்றும் மகன்களை கைது செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர். ஓய்வு பெற்ற தாசில்தார் நில தகராறில் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com