திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள பள்ளிவிடை பகுதியில் ‘புனித மரியன்னை அரசு உதவி பெறும் பள்ளி’ செயல்பட்டு வருகிறது. ஒன்றாம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை இயங்கி வரும் இப்பள்ளியில் பள்ளிவிடை, மாடகுடி, சாத்தம்பாடி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில், சுமார் 5 மாதங்களுக்கு முன்பு ஜெயராஜ் என்பவர் அப்பள்ளியின் தலைமையாசிரியராகவும், அதே பகுதியைச் சேர்ந்த பங்குத்தந்தையாகவும் பொறுப்பேற்றதாக (பாதிரியார்) கூறப்படுகிறது.
பொறுப்பேற்ற சில நாட்களிலேயே, பள்ளி மாணவிகளிடம் அவர் வரம்பு மீறி நடக்கத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. அவ்வப்போது மாணவிகளிடம் தனது அலுவலக அறையில் உள்ள பீரோவிலிருந்து பொருட்களை எடுத்து வரச் சொல்லி தனியாக அழைத்து அவர்களிடம் அத்துமீறலில் ஈடுபடுவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். அவ்வாறு பொருட்கள் எடுக்கும் சாக்கில் மாணவிகளை பின்தொடர்ந்து சென்று தொடுவது, கன்னத்தைக் கிள்ளுவது மற்றும் முத்தம் கொடுப்பது எனத் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக சொல்லப்படுகிறது.
பாதிரியார் என்பதால் அச்சமடைந்த மாணவிகள், ஆரம்பத்தில் இதுகுறித்து வெளியில் சொல்லப் பயந்து அமைதி காத்து வந்ததாகத் தெரிகிறது. ஆனால் நாளுக்கு நாள் அவரது தொல்லை அதிகரிக்கவே மாணவிகள் இது குறித்து தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சம்பவம் தொடர்பாக பள்ளி நிர்வாகம் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மாணவிகளின் புகாரின் அடிப்படையில், ஜெயராஜ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டதாகவும் தெரிகிறது.
இந்த நிலையில், மாணவிகளிடம் அவர் எவ்வாறு நடந்து கொண்டார், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றுள்ளதா, மேலும் யாரேனும் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. மேலும், மாணவிகளின் பாதுகாப்பு மற்றும் அவர்களது நலனை கருத்தில் கொண்டு பள்ளி நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தி வருகின்றனர். சிறுமிகள் தொடர்புடைய விவகாரம் என்பதால், அவர்களின் அடையாளம் மற்றும் தனிப்பட்ட விவரங்கள் வெளியிடப்படாமல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்