

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள குளத்து பட்டியைச் சேர்ந்தவர் 32 வயதான பிரபாகரன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 26 வயதுடைய அபிராமி என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஒன்பது மற்றும் ஆறு வயதிலிருந்து மகன்கள் உள்ளனர். பிரபாகரன் வையம்பட்டியில் உள்ள ஒரு டாஸ்மாக் மதுபான கூடத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவர் கடந்த 12ம் தேதி குளத்துப்பட்டியில் சாலையோரம் உள்ள ஒரு புளிய மரத்தடியில் இறந்து கிடந்துள்ளார்.
இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்திருக்கின்றனர். தகவலின் பெயரில் அவரது மனைவி மற்றும் உறவினர்கள் சென்று பார்த்து இறந்து போன பிரபாகரன் உடலை அவரது வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளனர். பிரபாகரன் முகம் மற்றும் கழுத்தில் காயங்கள் இருந்ததையடுத்து உறவினர்கள் சந்தேகம் அடைந்து அவரது மனைவி அபிராமியை போலீசில் புகார் அளிக்க கூறியுள்ளனர். ஆனால் அபிராமி அதற்கு முதலில் மறுப்பு தெரிவித்த நிலையில் பின்னர் உறவினர்களின் வலியுறுத்தலின் பேரில் கணவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக புத்தாநத்தம் போலீசில் புகார் அளித்திருக்கிறார்.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்த பிரபாகரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த நிலையில் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அபிராமிக்கும் அவரது உறவினரான பப்லு என்ற பிரபு என்பவருக்கும் தகாத உறவு இருந்து வந்தது தெரியவந்துள்ளது. அபிராமியின் உறவினரான பப்லு அடிக்கடி அவரது வீட்டிற்கு வந்து செல்லும் நிலையில் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. எனவே இருவரும் அவ்வப்போது சந்தித்து பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது.
பின்னர் இருவரும் பிரபாகரன் வேலைக்கு சென்ற பிறகு வீட்டில் உல்லாசமாக இருந்து வந்திருக்கின்றனர். ஒரு கட்டத்தில் இதனை அறிந்த பிரபாகரன் மனைவி மற்றும் உறவினர் பப்லுவை கண்டித்திருக்கிறார்.ஆனால் இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில் அபிராமியும் பப்லுவும் சேர்ந்து பிரபாகரனை கொலை செய்ய திட்டம் தீட்டி இருக்கின்றனர். பின்னர் அதன்படி கடந்த 12ம் தேதி வேலைக்குச் சென்று வீட்டுக்கு திரும்பிய பிரபாகரனிடம் நைசாக பேசிய பப்லுவின் நண்பர்கள் பிரபு மற்றும் சரவணன் ஆகியோர் அவரை அழைத்துச் சென்று அளவுக்கு அதிகமாக மது அருந்த வைத்திருக்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து மது போதையில் சுயநினைவு இல்லாமல் இருந்த வரை மூன்று பேரும் சேர்ந்து கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டு தண்டனையில் இருந்து தப்பிக்க மரத்தடியில் உடலை போட்டுச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து இந்த சம்பவத்தில் அபிராமி மற்றும் பப்லு ஆகிய இருவரையும் புத்தாநத்தம் போலீசார் கைது செய்தனர். மேலும் கொலைக்கு உடந்தையாக இருந்த பப்லு நண்பர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.