

தூத்துக்குடி மாவட்டம், அருகே அத்திமரப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த சின்னையா என்பவரது மனைவி 75 வயதுடைய பாப்பா. இவர்களுக்கு மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ள நிலையில் அனைவருக்கும் திருமணமாகி குடும்பத்துடன் வாழ்ந்து வருகின்றனர். சின்னையா ஏற்கனவே உயிரிழந்த நிலையில் மகள்கள் மற்றும் மகனுக்கு திருமணமான நிலையில் பாப்பா மட்டும் அத்திமரப்பட்டியில் தனியாக வசித்து வந்திருக்கிறார். இதற்கிடையில் இவரது நான்காவது மகளான சுப்புராணி கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை பிரிந்து ஐந்து வருடங்களாக தாயுடன் வசித்து வந்திருக்கிறார்.
எனவே சுப்புராணிக்கு திருமணம் செய்து வைக்க நினைத்த தாய் பாப்பா முத்தையாபுரம் ராஜிவ் காந்தி நகரை சேர்ந்த லிங்க துரைக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார். இவருக்கும் ஏற்கனவே திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் சுப்புராணியுடன் திருமணமானது குறிப்பிடத்தக்கது. லிங்க துரை மற்றும் சுப்புராணி தனியாக முத்தையாபுரம் பகுதியில் வீடு எடுத்து வசித்து வந்த நிலையில் சுப்புராணிக்கு அவ்வப்போது உடல்நல குறைபாடு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் சுப்புராணி கடந்த மாதம் உடல் நல குறைபாட்டால் உயிரிழந்த நிலையில் அவரது உடைமைகள் மற்றும் நகைகளை அவரது தாய் பாப்பா தனது வீட்டிற்கு எடுத்து சென்றதாக சொல்லப்படுகிறது. மனைவி இறந்த பிறகு அவரது நகையை கேட்டு லிங்கதுரை அடிக்கடி மாமியார் பாப்பாவிடம் தகராறு செய்து வந்திருக்கிறார். வழக்கம் போல நேற்று மாமியார் வீட்டிற்கு சென்ற லிங்கதுரை பாப்பாவிடம் தனது மனைவியின் நகையை கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த லிங்க துரை தனது மாமியாரை அடித்து தள்ளி விட்ட நிலையில் கீழே விழுந்த மூதாட்டிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் பாப்பாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தகவல் அறிந்து மருத்துவமனைக்கு சென்ற போலீசார் உயிரிழந்த மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நகைக்காக மாமியாரை கொன்ற மருமகன் லிங்க துரையை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். தனியாக வாழ்ந்து வந்த மூதாட்டி சோனக மருமகனை நகைக்காக கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டாம் திருமணமான சுப்புராணிக்கும் லிங்க துரைக்கும் குழந்தைகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.