“இன்ஸ்டாகிராம் ஸ்டோரியால் வெடித்த பிரச்சனை” - ஓட ஓட வெட்டிக் கொல்லப்பட்ட வாலிபர்… பள்ளி சிறுவர்களால் நேர்ந்த பயங்கரம்!

கால் தவறி கீழே விழுந்த மனோஜை, அந்த கும்பல் சுற்றி வளைத்து அரிவாளால் கண்மூடித்தனமாக...
“இன்ஸ்டாகிராம் ஸ்டோரியால் வெடித்த பிரச்சனை” - ஓட ஓட வெட்டிக் கொல்லப்பட்ட வாலிபர்… பள்ளி சிறுவர்களால் நேர்ந்த பயங்கரம்!
Published on
Updated on
2 min read

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் 2வது மேலத் தெருவைச் சேர்ந்த திருப்பதி என்பவரது மகன் 18 வயதுடைய மனோஜ். பிளம்பிங் மற்றும் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்த இவர், கடந்த (பிப் 26) ஆம் தேதி இரவு தனது நண்பர்களுடன் அதே பகுதியில் 3 ஆவது தெருவில் உள்ள புரோட்டா கடை அருகே நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு பைக்குகளில் வந்த மர்ம நபர்கள், மனோஜ் மற்றும் அவரது நண்பர்களை வெட்ட முயற்சித்த நிலையில் இதனைப் பார்த்து மனோஜும், அவரது நண்பர்களும் தப்பித்து ஓடினர். அப்போது கால் தவறி கீழே விழுந்த மனோஜை, அந்த கும்பல் சுற்றி வளைத்து அரிவாளால் கண்மூடித்தனமாக வெட்டிவிட்டு தப்பி சென்றது.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பலத்த காயம் அடைந்த மனோஜை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு அனுமதித்தனர் பின்னர் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் காலை மனோஜ் உயிரிழந்தார். இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகளை தேடி வந்தனர்.

Admin

இந்நிலையில், போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன. கோவில்பட்டியில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர், இன்ஸ்டாகிராமில் “கிங்ஸ் ஆப் அவர் ஸ்கூல்” என பள்ளியின் பெயரை குறிப்பிட்டு, போட்டோ பதிவிட்டதாக கூறப்படுகிறது. இதனை அதே பள்ளியில் 11வது வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் பார்த்து, இன்ஸ்டாகிராமில் போட்டோ பதிவிட்ட 10ம் வகுப்பு மாணவரை அழைத்து, சீனியர் நாங்கள் இருக்கும் போது ஜூனியர் நீங்கள் எப்படி இன்ஸ்டாகிராமில் போட்டோ பதிவிடலாம், அதுவும் கிங்ஸ் என எப்படி குறிப்பிடலாம் எனக் கேட்டு தகராறு செய்ததாக சொல்லப்படுகிறது.

இந்த தகராறு இரு தரப்பினருக்கு இடையே மோதலாக மாறிய நிலையில் அதில் ஒரு தரப்பினருக்கு மனோஜ் ஆதரவாக செயல்பட்டு தகராறில் ஈடுபட்டிருக்கிறார். இதனால் அவரை எதிர் தரப்பினரை சேர்ந்த சிலர் அரிவாளால் வெட்டி கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து, இவ்வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் கோவில்பட்டி இலுப்பையூரணி மறவர் காலனியைச் சேர்ந்த சுடலைமுத்து மகன் குமார் (24), துரைசாமி புரத்தைச் சேர்ந்த வென்னிமலை மகன் முனியசாமி என்ற வேலு (19), திருநெல்வேலி முன்னீர்பள்ளத்தைச் சேர்ந்த சண்முகம் மகன் நெல்லையப்பன் (22) மற்றும் மேலப்பாளையத்தை சேர்ந்த 17 வயது சிறுவன், கோவில்பட்டி முகமது சாலிகாபுரத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து ஒரு பைக்கையும் பறிமுதல் செய்தனர். அதோடு, இவ்வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com