

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே கஸ்தூரிரங்காபுரம் காட்டுப்பகுதியில் இளம்பெண் இறந்த நிலையில் சடலமாக இருப்பதாக கழுகுமலை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில் உயிரிழந்து கிடந்த பெண் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தளவாய் புரத்தைச் சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவரின் 19 வயதுடைய மகள் உமா என்பதும், அவர் பாறைப்பட்டியில் உள்ள தனியார் போலீஸ் தேர்வு கோச்சிங் சென்டரில் படித்து வந்ததும் தெரிய வந்தது.
இதுகுறித்து கழுகுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இவ்வழக்கு தொடர்பாக உமாவின் ஆண் நண்பர் தென்காசி மாவட்டம் குளக்காட்டான் குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சடலமாக கிடந்த உமா மற்றும் ராஜேஷ் இருவரும் பாறைப்பட்டியில் உள்ள தனியார் கோச்சிங் சென்டரில் காவலர் தேர்வுக்காக பயிற்சி பெற்று வந்துள்ளனர். தொடக்கத்தில் இருவரும் நண்பர்களாக பழகி வந்த நிலையில் பின்னர் அது காதலாக மாறி நெருங்கி பழகி இருக்கின்றனர். இந்நிலையில் உயிரிழந்த உமாவிற்கு இன்ஸ்டாகிராமில் ஒரு ஆண் நண்பருடன் பழக்கம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனை அறிந்த ராஜேஷ் உமாவை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கிடையே அவ்வப்போது பிரச்சனை எழுதுவதும், பின்னர் பேசி சமாதானம் செய்வதும் வழக்கமாக இருந்துள்ளது.
அதே போன்று தான் கடந்த ஒரு வார காலத்திற்கு மேலாக இருவருக்கிடையே பிரச்சனை இருந்துள்ளது. இருவரும் பிரிந்து விடலாம் என்று உமா தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவரை சமாதானப்படுத்தி விடலாம் என்று நினைத்த ராஜேஷ், நேற்று மாலை தனது பைக்கில் உமாவை வெளியில் அழைத்துச் சென்றுள்ளார். நடுவப்பட்டியில் இருந்து சிவகாசி செல்லும் சாலையில் கஸ்தூரிரங்கபுரம் கிராமத்தை அடுத்து உள்ள காட்டுப் பகுதிக்கு சென்றதும் சிறிது நேரம் பேசி விட்டு செல்லலாம் என்று ராஜேஷ் கூற அதற்கு உமாவும் சம்மதம் தெரிவித்துள்ளார்.
இருவரும் காட்டுப் பகுதியில் அமர்ந்து பேசிய போது தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி ராஜேஷ் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு உமா மறுத்ததாக கூறப்படுகிறது. “இவ்வளவு நாள் என்னை காதலித்து விட்டு தற்போது வேண்டாம் என்று சொல்கிறாயா” என ராஜேஷ் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றவே உமா வைத்திருந்த துப்பட்டாவை பறித்து அவரது கழுத்தை நெரித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது.
மேலும் ஆத்திரத்தில் கழுத்தை நெரித்ததும் உமா இறந்தது தெரியாமல் மயக்கம் அடைந்து விட்டார் என்று நினைத்த ராஜேஷ், 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்துள்ளார். மேலும் அருகில் இருந்த வெம்பக்கோட்டை காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்துள்ளார். 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து பார்த்த போது உமா இறந்தது உறுதி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்தது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.