“வேலைக்கு போகமாக ஊதாரித்தனமா..” - தகாத வார்த்தைகளில் தாயை திட்டிய வாலிபர்.. இதயத்தை கத்தியால் குத்தி கொலை செய்த மகன்!
தூத்துக்குடி மாவட்டம், அழகேசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார் இவரது மகன் சோலையப்பன். இவர் படித்து முடித்து விட்டு வேலைக்கு எதுவும் சொல்லாமல் தனது நண்பர்களுடன் சுற்றி திரிந்து வந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் அதே பகுதியை சேர்ந்த சுப்பையா என்பவரது மகன் செல்வகுமார் , தூத்துக்குடி எட்டையாபுரம் ரோடு சாலையில் சாலையோர பழக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு செல்வகுமாரின் தாயார் தெருவில் நின்று கொண்டு அக்கம் பக்கத்தில் இருந்த நபர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போது “அவங்க குடும்பத்துல எவ்வளவு கஷ்டப்படுறாங்க இவன் ஒரு வேலைக்கு கூட போகமாக ஊதாரிதனமா ஊர் சுத்திட்டு இருக்கான்” என சோலையப்பனை பற்றி பேசியதாக கூறப்படுகிறது. இதை அருகே இருந்து கேட்ட சோலையப்பன் செல்வகுமாரின் தாயாருடன் தகராறில் ஈடுபட்டு அவரை தகாத வார்த்தைகளால் திட்டியதாக சொல்லப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த செல்வகுமாரின் தாய் சோலையப்பன் தகராறு செய்தது தொடர்பாக தனது மகன் செல்வகுமாருக்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுத்தார். இதன் காரணமாக தனது தாயை தகாத வார்த்தைகளால் பேசியதை கேட்டு ஆத்திரம் அடைந்த செல்வக்குமார் உடனடியாக தனது வீட்டிற்கு வந்து அங்கிருந்து கத்தியை எடுத்தபடி சோலையப்பன் வீட்டிற்கு சென்று அங்கிருந்த சோலையப்பனிடம் “என் அம்மாவ எதுக்கு மரியாதை இல்லாம பேசுன” என கேட்டு வாக்குவாதம் செய்தார்.
அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த செல்வகுமார் சோலையப்பனை கத்தியால் இதயப் பகுதி அருகே குத்தியுள்ளார். இதைத்தொடர்ந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த சோலையப்பனை அக்கம் பக்கத்தினர் மற்றும் அவரது குடும்பத்தார் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சோலையப்பன் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் சோலையப்பனை கொலை செய்த பழ வியாபாரி செல்வக்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடியில் தாயை திட்டிய ஆத்திரத்தில் வாலிபரை பழகடை வியாபாரி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.