"குறைந்த ரூம் வாடகைக்காக 15 வயது சிறுமியுடன் உறவு... அமெரிக்காவில் இந்திய வம்சாவளி ஹோட்டல் ஊழியருக்கு 10 ஆண்டு சிறை!"

15 மற்றும் 16 வயதுடைய இரண்டு சிறுமிகள் மீட்கப்பட்டனர். அவர்கள் வேறு மாநிலங்களில் இருந்து ஒமாஹாவுக்கு அழைத்து வரப்பட்டு, பணத்திற்காக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டதாக அதிகாரிகள் கண்டறிந்தனர்.
Nebraska hotel case
Nebraska hotel caseNebraska hotel case
Published on
Updated on
2 min read

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 27 வயதான காவன்குமார் பட்டேல் என்ற இந்திய வம்சாவளி நபருக்கு அமெரிக்க நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. நெப்ராஸ்கா மாநிலத்தின் ஒமாஹா நகரில் உள்ள AmericInn ஹோட்டலில் பணியாற்றி வந்த அவர், மனிதக் கடத்தல் கும்பலிடம் பணம் கொடுத்து 15 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பான விசாரணை, முதலில் திருட்டு புகார் ஒன்றின் அடிப்படையில் தொடங்கியது. 2025 ஜனவரி 6-ஆம் தேதி போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, மனிதக் கடத்தல் மற்றும் சிறுமிகள் பாலியல் சுரண்டலுக்காக பயன்படுத்தப்பட்டதற்கான முக்கிய ஆதாரங்கள் கிடைத்தன. இதையடுத்து அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை மற்றும் ஒமாஹா போலீசார் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

விசாரணையின்போது, 15 மற்றும் 16 வயதுடைய இரண்டு சிறுமிகள் மீட்கப்பட்டனர். அவர்கள் வேறு மாநிலங்களில் இருந்து ஒமாஹாவுக்கு அழைத்து வரப்பட்டு, பணத்திற்காக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டதாக அதிகாரிகள் கண்டறிந்தனர். இந்த சிறுமிகள் தங்கியிருந்த ஹோட்டலிலேயே பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்தன.

அமெரிக்க அரசுத் தரப்பு வெளியிட்ட அறிக்கையின்படி, ஹோட்டல் ஊழியர்களுடன் பாலியல் உறவு கொண்டால் மட்டுமே குறைந்த வாடகையில் அறை வழங்கப்படும் என்றும், அதற்கு மறுத்தால் ஹோட்டலில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்றும் மனிதக் கடத்தல் கும்பல் சிறுமிகளிடம் கூறியிருந்தது. இதன் அடிப்படையில் இரண்டு ஹோட்டல் ஊழியர்கள் ஒரு சிறுமியுடன் உறவு கொள்வதற்காக கடத்தல்காரர்களுக்கு பணம் கொடுத்ததாகவும், மற்றொரு ஊழியர் மற்றொரு சிறுமியுடன் பாலியல் உறவில் ஈடுபட்டதாகவும் விசாரணையில் தெரியவந்தது.

AmericInn ஹோட்டலில் பணியாற்றிய காவன்குமார் பட்டேல், ஹோட்டல் பணப்பெட்டியில் இருந்த பணத்தை பயன்படுத்தி சிறுமியுடன் பாலியல் உறவு கொள்வதற்காக கடத்தல்காரர்களுக்கு பணம் கொடுத்ததை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். மேலும், மனிதக் கடத்தல் கும்பலும் சிறுமிகளும் பல நாட்கள் ஹோட்டலில் தங்க அனுமதிக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

கடத்தல்காரர்கள் இணையதளங்களில் விளம்பரங்கள் வெளியிட்டு, சிறுமிகளை பயன்படுத்தி பணத்திற்காக பாலியல் சேவைகளை ஏற்பாடு செய்து வந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்ட சிறுமிகள், போதிய உணவு கூட கிடைக்காத சூழலில் இருந்ததாகவும், வேறு வழியின்றி பாலியல் செயல்களில் ஈடுபட கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கி இருந்த காவன்குமார் பட்டேல், சிறைத் தண்டனை காலம் முடிந்த பிறகு நாடுகடத்தப்படுவார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் மனிதக் கடத்தல் கும்பலைச் சேர்ந்த எடுவார்டோ ஜோஸ் பெர்டோமோ, மைக்கேல் மார்டினஸ்-கோன்சாலஸ், அல்ஃப்ரெடோ ஜாம்ப்ரானோ-ஹர்டாடோ ஆகியோருடன், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மற்ற ஹோட்டல் ஊழியர்களான சுமித் சௌதரி மற்றும் விஷால் கோஸ்வாமி ஆகியோர்மீதும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க அரசு வழக்கறிஞர் லெஸ்லி வுட்ஸ், "இந்த குழந்தைகள் வாழ்ந்து கொண்டிருந்த கொடூரமான சூழலிலிருந்து அவர்களை பாதுகாப்பாக மீட்டது உள்நாட்டு பாதுகாப்புப் படையினரின் முக்கிய சாதனையாகும்" என்று தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அமெரிக்காவில் மனிதக் கடத்தல் மற்றும் சிறுவர்கள் மீதான பாலியல் சுரண்டல் தொடர்பான பிரச்சினைகளை மீண்டும் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com