
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஃப்ரீமாண்ட் நகரில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வருண் சுரேஷ் (29) என்ற இளைஞர், பதிவு செய்யப்பட்ட பாலியல் குற்றவாளியான டேவிட் பிரிம்மர் (71) என்பவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம், அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. "இந்தக் கொலையைச் செய்தது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு (It was really fun)" என்று சுரேஷ் விசாரணையின்போது கூறியது, மேலும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
கொலை செய்யப்பட்ட பிரிம்மர், 1995-ஆம் ஆண்டு சிறுமியுடன் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதற்காகச் சிறை சென்றவர். குழந்தைகளைக் காயப்படுத்தும் பாலியல் குற்றவாளிகளைக் கொல்ல வேண்டும் என்ற வெறி தனக்கு நீண்ட காலமாகவே இருந்ததாகக் கூறும் சுரேஷ், இதற்காகவே ‘மேகன்ஸ் லா’ எனப்படும் பாலியல் குற்றவாளிகளின் பொதுத் தரவுத்தளத்தில் பிரிம்மரின் முகவரியைத் தேடி கண்டுப்பிடித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 18 அன்று, சுரேஷ் வாடிக்கையாளர்களைத் தேடி வீடு வீடாகச் செல்வது போல் நடித்து, பிரிம்மரின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அவர் பிரிம்மர் தான் என்பதை நேரில் உறுதி செய்தவுடன், அவரைத் தாக்க முற்பட்டுள்ளார். சுதாரித்துக் கொண்டு பிரிம்மர் அங்கிருந்து தப்பியோட முயன்றபோது, சுரேஷ் துரத்திச் சென்று, அங்கே பக்கத்துக்கு வீட்டின் சமையலறையில் வைத்துப் பிடித்துள்ளார்.
பிரிம்மரை மடக்கிப் பிடித்த சுரேஷ், "நீண்ட நாட்களாக உனக்காகத் தான் காத்துக் கொண்டிருந்தேன். இப்போது நீ உன் பாவத்திற்குப் பிராயச்சித்தம் செய்ய வேண்டும்" என்று கூறியபடியே, கத்தியால் கழுத்தில் குத்தி, அவரது கழுத்தை அறுத்துக் கொன்றுள்ளார்.
கொலைக்குப் பிறகு காவல்துறையிடம் சுரேஷ் அளித்த வாக்குமூலத்தில், தான் இந்தக் குற்றத்திற்காகத் தப்பிக்கவோ அல்லது மறைந்து கொள்ளவோ நினைக்கவில்லை என்றும், "பாலியல் குற்றவாளிகள் சாகத் தகுதியானவர்கள். உண்மையில் அவரைக் கொன்றது எனக்கு சுகமாக இருந்தது" என்றும் எந்தவித மன உறுத்தலும் இல்லாமல் தெரிவித்துள்ளார். மேலும், இந்தக் கொலையை மக்கள் கொண்டாடுவார்கள் என்றும் அவர் நம்புவதாகவும் கூறியுள்ளார்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறை, வருண் சுரேஷ் மீது கொலை (Murder), அத்துமீறி நுழைதல் மற்றும் அபாயகரமான ஆயுதத்தைக் கையாண்டது உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளது. சுரேஷின் பின்னணியை ஆராய்ந்ததில், அவர் 2021-ஆம் ஆண்டிலும், ஒரு ஹோட்டல் தலைமை நிர்வாக அதிகாரி பாலியல் குற்றவாளி என்று பொய்யாகக் குற்றம் சாட்டி, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் தற்போது நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.