“திருமணத்திற்கு மறுத்த பெண்ணின் தாய் வெட்டி கொலை” - நிச்சயதார்த்தம் முடிந்து 2 மாதத்தில் வெறிச்செயல்! வயசு தான் காரணமா?

பலத்த காயமடைந்த அவரது மகள் வர்ஷாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு..
virudhunagar murder case
Published on
Updated on
1 min read

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே கல்குறிச்சி கிராமத்தை சேர்ந்த முத்துக்குமாரின் மகள் வர்ஷா (21). இவருக்கும், முத்துக்குமாரின் அக்கா மகனான யுவராஜாவுக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு குடும்பத்தினர் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வர்ஷா அத்தை மகனான யுவராஜாவை திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லை என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. பின்னர் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை வேண்டும் என்றும் தவிர்த்துள்ளனர். மணமகள் வார்ஷா விற்கு 21 வயது ஆகும் நிலையில் மணமகனான யுவராஜ்-க்கு 31 வயது அவதாக சொல்லப்படுகிறது. இந்த வயது வித்தியாசம் காரணமாக திருமணம் வேண்டாம் என்று வர்ஷா தனது பெற்றோரிடம் தெரிவித்து வந்துள்ளார். இதனால் திருமணம் நடப்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று காலை வர்ஷா தனது வீட்டின் முன்பு வாசலில் துணி துவைத்துக் கொண்டிருந்த போது, அரிவாளுடன் அங்கு வந்த யுவராஜா திடீரென அவரை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் வர்ஷா பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்துள்ளார். அந்த நேரத்தில் மருத்துவமனைக்குச் சென்று விட்டு வீடு திரும்பிய வர்ஷாவின் தாயார் விநாயக ஜோதி (45), தனது மகளை காப்பாற்ற முயன்ற போது யுவராஜா அவரையும் அரிவாளால்  சரமாரியாக வெட்டியுள்ளார்.  

இதில் தாய் விநாயகஜோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயமடைந்த அவரது மகள் வர்ஷாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். அங்கு வர்ஷாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மல்லாங்கிணறு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விநாயக ஜோதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில், இந்த கொலைச் சம்பவத்தைத் தொடர்ந்து கொலை செய்த யுவராஜா, பயன்படுத்திய அரிவாளுடன் மல்லாங்கிணறு காவல் நிலையத்தில் சரணடைந்ததாக கூறப்படுகிறது. அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் திருமண நிச்சயதார்த்தத்தை தொடர்ந்து ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இளம்பெண்ணை கொலை செய்ய முயன்றதுடன், தடுக்க வந்த அவரது தாயை வெட்டிக்கொன்றதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த சம்பவம் கல்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com