“லவ் டார்ச்சரை தட்டிக்கேட்ட அப்பா” - மகள் கண்முன்னே கத்தியால் குத்திக்கொலை.. நடுரோட்டில் குடும்பமே சேர்ந்து வெறிச்செயல்!

அய்யனாரின் அலறல் சத்தம் கேட்டு அவரது 17 வயது மகளும், மகனும் சம்பவ இடத்திற்கு வந்து...
virudhunagar murder
virudhunagar murder
Published on
Updated on
1 min read

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே கோட்டையூர் கிழக்கு காலனியைச் சேர்ந்தவர் 38 வயதுடைய அய்யனார். இவரது 17 வயது மகள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய பெரியசாமி, மாணவியை காதலிப்பதாக கூறி, அவர் பள்ளிக்கு செல்லும் போதும், வீட்டிற்கு திரும்பும் போதும் பின்தொடர்ந்து தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. மாணவி பலமுறை எச்சரித்தும் வாலிபர் கேட்காததால் இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இதனை கேட்டு கோபமடைந்த மாணவியின் தந்தை அய்யனார், பெரியசாமியை அழைத்து கண்டித்துள்ளார். இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு, முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், இந்த முன்விரோதத்தை மனதில் வைத்திருந்த பெரியசாமி, தனது வீட்டின் அருகே நடந்து சென்ற அய்யனாரிடம் வேண்டுமென்றே தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது பெரியசாமியின் சகோதரர் அழகுராஜா உள்ளிட்ட குடும்பத்தினரும் அங்கு வந்த நிலையில் தகராறு முற்றி கைகலப்பாக மாறியுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த பெரியசாமி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அய்யனாரின் முதுகில் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அய்யனார் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து உயிருக்கு போராடியுள்ளார். அய்யனாரின் அலறல் சத்தம் கேட்டு அவரது 17 வயது மகளும், மகனும் சம்பவ இடத்திற்கு வந்து தந்தையை காப்பாற்ற முயன்றுள்ளனர். அப்போது பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் இருவரையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் மகன் மற்றும் மகள் கண்முன்னே அய்யனார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வத்திராயிருப்பு போலீசார், அய்யனாரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக அய்யனாரின் தாய் பெரிய கருப்பி அளித்த புகாரின் பேரில், பெரியசாமி, அவரது சகோதரர் அழகுராஜா, அழகுராஜாவின் மனைவி பேச்சியம்மாள் உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் நான்கு பெரும் சம்பவத்திற்குப் பிறகு தலைமறைவான நிலையில் வத்திராயிருப்பு போலீசார் அவர்களை தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். மகளுக்கு காதல் தொல்லை கொடுத்ததை தட்டிக்கேட்ட தந்தையை, முன்விரோதம் காரணமாக ஒரு குடும்பமே சேர்ந்து கொலை செய்ததாக கூறப்படும் சம்பவம் வத்திராயிருப்பு பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com