“ரீல்ஸ் போட்டு பெண்களை மயக்கிய மீனவர்” - மனைவி கண்டுபிடித்த அந்த ஒரு ரகசியம்.. வியாசர்பாடி கொலையில் திடீர் திருப்பம்!

சிவா அடிக்கடி பெங்களூரு சென்று அந்தப் பெண்ணை சந்தித்து வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது...
marital affair murder
marital affair murder
Published on
Updated on
2 min read

சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் 30 வயதுடைய சிவா. மீன்பிடித் தொழில் செய்து வரும் இவருக்கும், வியாசர்பாடி மூர்த்திங்கர் நகரைச் சேர்ந்த 23 வயதுடைய வெண்ணிலா என்பவருக்கும் சுமார் 9 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, வெண்ணிலா குழந்தைகளுடன் தனது தாயார் வீட்டிற்குச் சென்று வசித்து வந்துள்ளார்.

இதையடுத்து, சிவா அடிக்கடி மாமியார் வீட்டிற்குச் சென்று மனைவியை சமாதானப்படுத்தி மீண்டும் மனைவியை அழைத்து வர முயன்றுள்ளார். ஆனால், வெண்ணிலா அவருடன் சேர்ந்து வாழ மறுத்ததாக கூறப்படுகிறது.

தனியாக அழைத்துச் சென்று கொடூர தாக்குதல்

இந்நிலையில், கடந்த (ஆக 10) -ஆம் தேதி மதியம், வியாசர்பாடி மூர்த்திங்கர் நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் தனது அக்கா வீட்டில் வெண்ணிலா இருந்துள்ளார். அப்போது அங்கு சென்ற சிவா, "தனியாக பேச வேண்டும்" எனக் கூறி வெண்ணிலாவை அறைக்குள் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது மீண்டும் சேர்ந்து வாழலாம் என சிவா கூறிய நிலையில் வெண்ணிலா அதற்கு சம்மதிக்காததால், ஆத்திரமடைந்த சிவா ஏற்கனவே மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரது கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற எம்.கே.பி. நகர் போலீசார், வெண்ணிலாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய சிவாவை தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர்.

இன்ஸ்டாகிராம் பழக்கம்

போலீசார் நடத்திய விசாரணையில், சிவா மீன்பிடித் தொழிலுடன் செல்போனில் ரீல்ஸ் பதிவிடுவது மற்றும் சமூக வலைதளங்களில் மற்றவர்களுடன் பழகுவது போன்றவற்றிலும் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. அவரது இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் பல பெண்களுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில், பெங்களூருவைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் சிவாவுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்தப் பழக்கம் காதலாக மாறியதாகவும், சிவா அடிக்கடி பெங்களூரு சென்று அந்தப் பெண்ணை சந்தித்து வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், அந்தப் பெண்ணுடன் தனிமையில் இருந்த புகைப்படங்களை சிவா தனது செல்போனில் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. எதிர்பாராத விதமாக அந்த புகைப்படங்களை வெண்ணிலா பார்த்ததால் கணவன்-மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, வெண்ணிலா சிவாவின் செல்போனை எடுத்துக்கொண்டு குழந்தைகளுடன் தாய் வீட்டிற்குச் சென்றதாக கூறப்படுகிறது.

மகாராஷ்டிராவில் தலைமறைவு

கொலைக்குப் பிறகு சிவா தலைமறைவான நிலையில், கடந்த (ஆக 15) ஆம் தேதி தனது நண்பர் ஒருவரை வடமாநில தொலைபேசி எண்ணிலிருந்து தொடர்பு கொண்டுள்ளார். அப்போது தான் மகாராஷ்டிராவில் இருப்பதாகவும், தனது குழந்தைகளைப் பார்க்க வரவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த தகவலை அடிப்படையாகக் கொண்டு போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். இறுதியில், நேற்று காலை வியாசர்பாடி கல்லுக்கடை பகுதியில் பதுங்கியிருந்த சிவாவை போலீசார் மடக்கிப் பிடித்தனர். அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில், மனைவியை சமாதானப்படுத்த முடியாத ஆத்திரத்தில் அவரை கத்தியால் தாக்கி கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து சிவா மீது கொலை வழக்குப்பதிவு செய்த எம்.கே.பி. நகர் போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பல பெண்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு இடையூறாக இருந்த மனைவியை கணவன் கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் வியாசர்பாடி பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com