HIV பரிசோதனை என்ற பெயரில் பாலியல் அத்துமீறலா? - ஆடைகளை களையச் சொல்லி.. அந்தரங்க உறுப்புகளை தொட்டு எல்லை மீறிய மருத்துவர்!

"அவரும் அவரது வருங்காலக் கணவரும் உடல்ரீதியாக நெருக்கமாக இருந்தார்களா?" என்று மருத்துவர் அந்த பெண்ணிடம் கேட்டுள்ளார்.
Assam crime news
Assam crime news
Published on: 
Updated on: 
2 min read

கௌஹாட்டியில் மருத்துவப் பரிசோதனை என்ற பெயரில் தன்னை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக கௌஹாட்டி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை (ஜிஎம்சிஎச்) மருத்துவர் மீது இளம் பெண் ஒருவர் குற்றம் சாட்டியதை அடுத்து, குற்றம் சாட்டப்பட்ட மருத்துவர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. மேலும், இந்தச் சம்பவம் வியாழக்கிழமை (அக் 15) அன்று நடந்ததை அடுத்து, அப்பெண்ணின் குடும்பத்தினர் பங்காகர் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்துள்ளனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக பாரதிய நியாய சம்ஹிதாவின் (BNS) பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை சனிக்கிழமை (அக் 17) அன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, "பெண்ணின் புகாரின் அடிப்படையில் நாங்கள் வழக்குப் பதிவு செய்துள்ளோம். அந்த மருத்துவரும் வரவழைக்கப்பட்டு, அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது," என காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக, ஊடகங்களிடம் தனக்கு நேர்ந்த கொடுமையை அப்பெண் விவரித்துள்ளார். சம்பவத்தன்று, எச்.ஐ.வி பரிசோதனையில் எதிர்மறை முடிவு வந்ததாகக் கூறப்பட்ட தனது வருங்காலக் கணவரின் மருத்துவ அறிக்கைகளை மருத்துவரிடம் காண்பிப்பதற்காக, அந்த பெண் தனது அத்தையுடன் ஜி.எம்.சி.எச் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். மருத்துவ அறிக்கைகளை பார்த்து விட்டு அந்த மருத்துவர் தன்னையும் (அந்த பெண்) பரிசோதிக்க வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார்.

மேலும் , அந்த மருத்துவர் அந்த பெண்ணின் அத்தையும், அந்த பெண்ணையும் பரிசோதனை அறைக்குள் அழைத்துள்ளார். அந்த பெண்ணின் அத்தையிடம் சில கேள்விகளைக் கேட்ட பிறகு, தன்னிடம் சில தனிப்பட்ட விஷயங்களைப் பற்றிப் பேச வேண்டும் என்று கூறி, அவரை வெளியே காத்திருக்குமாறு கூறியுள்ளார். அவரது வருங்கால மாமியார் வெளியே சென்ற பிறகு, "அவரும் அவரது வருங்காலக் கணவரும் உடல்ரீதியாக நெருக்கமாக இருந்தார்களா?" என்று மருத்துவர் அந்த பெண்ணிடம் கேட்டுள்ளார்.

அவரது வருங்காலக் கணவர் எச்.ஐ.வி பரிசோதனை செய்துகொண்டதால், சில நோய்கள் மாதங்கள் அல்லது பல வருடங்கள் கழித்துக்கூட வெளிப்படக்கூடும் என்று கூறி, அந்த பெண்ணையும் பரிசோதிக்கப்பட வேண்டும் என அந்த மருத்துவர் வற்புறுத்தியுள்ளார்.

மேலும், மார்பு மற்றும் அடிவயிற்றுப் பரிசோதனைக்கு அந்த பெண் ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து அந்த மருத்துவர் அந்த பெண்ணிடம் ஆடைகளைக் கழற்றுமாறு கூறியுள்ளார். பரிசோதனை அறைக் கதவை மூடி, வேறு யாரும் இல்லாத நிலையில் பரிசோதனையை அந்த மருத்துவர் தொடங்கியுள்ளார். “நான் ஏன் என் டி-ஷர்ட்டைக் கழற்ற வேண்டும் என்று கேள்வி எழுப்பினேன், மேலும் அதைக் கழற்றாமலேயே அவர் என்னைப் பரிசோதிக்க முடியுமா? என்றும் கேட்டேன்.

எனக்குச் சங்கடமாக இருந்தாலும், அவர் ஒரு மருத்துவர் என்பதால் ஆரம்பத்தில் நான் ஆட்சேபிக்கவில்லை,” என்று அந்த பெண் தெரிவித்துள்ளார். மருத்துவர் என்பதால் அவருக்கு சந்தேகமும் வரவில்லை.

பரிசோதனையின் போது, மருத்துவர் தனது அந்தரங்க உறுப்புகளைத் தவறான முறையில் தொட்டதாக அப்பெண் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அந்த பெண், "அவர் எனது அந்தரங்கப் பகுதியைத் தவறான முறையில் தொட்டார். நல்ல தொடுதலுக்கும் தவறான தொடுதலுக்கும் உள்ள வித்தியாசம் எங்களுக்குத் தெரியும், அவர் தவறான முறையில்தான் தொட்டார்," என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

அதன் பின்னர், அவரது அடிவயிற்றைப் பரிசோதிக்க வேண்டும் என்று கூறி, மருத்துவர் அந்த பெண்ணின் ஜீன்ஸைக் கழட்டச் சொன்னதாகவும், பின்னர் அவரது அந்தரங்க உறுப்புகளைப் பரிசோதிக்க வேண்டும் என்று கூறி, அவரே ஜீன்ஸைக் கீழே இறக்கியதாகவும் அந்த பெண் மேலும் திடுக்கிடும் செய்தியை பகிர்ந்துள்ளார்.

“இத்தகைய பரிசோதனை ஏன் அவசியம் என்று நான் கேட்டேன், ஆனால் அவர் அதை முறையாகச் சரிபார்க்க வேண்டும் என்று வற்புறுத்தினார்,” என்று அந்த பெண் தெரிவித்துள்ளார். இறுதியில், மிகுந்த மன உளைச்சலுடன் அறையை விட்டு வெளியேறியதாக அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.

பின்னர் அந்த பெண்ணிடமிருந்து இரத்த மாதிரி சேகரிக்கப்பட்ட போதிலும், தன்னால் இனிமேலும் அமைதியாக இருக்க முடியவில்லை என்றும், அதனால் நடந்ததாகக் கூறப்படும் அந்தச் சம்பவத்தை மருத்துவமனை ஊழியர்களிடமும் தனது குடும்ப உறுப்பினர்களிடமும் தெரிவித்ததாகவும் அந்த பெண் பகிர்ந்துள்ளார்.

சம்பவத்தை கூறியபின், சில மூத்த மருத்துவர்கள் அந்த பெண்ணை மருத்துவமனையில் வேறொரு இடத்தில் அமர்ந்து, சம்பவம் குறித்த எழுத்துப்பூர்வமான அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுள்ளனர்.

இருப்பினும், விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த பிறகு, தனக்கு மேற்கொண்டு எந்த உதவியும் கிடைக்காமல் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் காக்கவைக்கப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதனையடுத்து, தனக்கு இங்கு உதவி கிடைக்காது என்று, காவல்துறையை அணுகி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com