
வடஇந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில், 8 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன கணவரை, அவரது மனைவி இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ மூலம் கண்டுபிடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஹர்தோய் மாவட்டத்தைச் சேர்ந்த ஷீலு, தனது கணவர் ஜிதேந்திர குமார் (எ) பப்லு என்பவரைக் கடந்த 8 ஆண்டுகளாகக் காணாமல் தேடி வந்தார். ஜிதேந்திரா, 2017-ஆம் ஆண்டு ஷீலுவைத் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஒரு மகன் பிறந்த பிறகு, 2018-ஆம் ஆண்டு ஜிதேந்திரா திடீரெனக் காணாமல் போனார்.
ஜிதேந்திராவின் தந்தை, தனது மகன் காணாமல் போனது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், அவரது குடும்பத்தினர், ஷீலுவின் உறவினர்கள்தான் இதற்கு காரணம் என்று குற்றம் சாட்டினர். இதனால், ஷீலு தனது தாய் வீட்டிற்குத் திரும்பி, தனது மகனை தனியாக வளர்த்து வந்தார்.
பல ஆண்டுகளாக ஜிதேந்திராவைத் தேடி வந்த ஷீலு, சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ஒரு ரீல்ஸ் வீடியோவைப் பார்த்துள்ளார். அந்த வீடியோவில், ஜிதேந்திரா மற்றொரு பெண்ணுடன் சிரித்துப் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்து ஷீலு அதிர்ச்சியடைந்துள்ளார். அந்த வீடியோவில் இருந்த நபர்தான் தனது காணாமல் போன கணவர் என்பதை உறுதிப்படுத்திய ஷீலு, உடனடியாக ஹர்தோய் காவல் நிலையத்தை அணுகி புகார் அளித்துள்ளார்.
ஷீலு அளித்த புகார் மற்றும் வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில், காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதில், ஜிதேந்திரா பஞ்சாபில் உள்ள லூதியானா நகரில் வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து, அவருடன் வசித்து வருவது தெரியவந்தது. இதையடுத்து, காவல்துறையினர் அவரை லூதியானா சென்று கைது செய்து, உத்தரப் பிரதேசத்திற்கு அழைத்து வந்தனர். ஜிதேந்திரா மீது, முதல் மனைவியைக் கைவிட்டு, இரண்டாவதாகத் திருமணம் செய்துகொண்டதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.