"நான் இன்னும் சாகல, என் அப்பாவை ரிலீஸ் பண்ணுங்க!" - இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட பெண் கொடுத்த பகீர் வாக்குமூலம்

26 வயது இளம்பெண், ஒரு மாதத்திற்குப் பின் திடீரென போலீஸ் ஸ்டேஷனுக்குள் உயிருடன் நடந்து வந்து அசாத்திய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளார்.
Woman Found Alive
Woman Found AliveWoman Found Alive
Published on
Updated on
2 min read

மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா மாநில எல்லைப் பகுதிகளில் காவல் துறையினரின் அலட்சியமான செயல்பாட்டை அம்பலப்படுத்தும் ஒரு விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் சம்பவம் வியாழக்கிழமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தனது தந்தை மற்றும் அண்ணனால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுவிட்டதாக மகாராஷ்டிரா போலீசாரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட 26 வயது இளம்பெண், ஒரு மாதத்திற்குப் பின் திடீரென போலீஸ் ஸ்டேஷனுக்குள் உயிருடன் நடந்து வந்து அசாத்திய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளார். சட்டம் மற்றும் ஒழுங்கைக் காக்க வேண்டிய போலீசாரின் இந்த மெகா சொதப்பல் சம்பவம் தற்போது நாடு முழுவதும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் பர்ஹான்பூர் மாவட்டத்தின் காக்னார் பகுதிக்கு உட்பட்ட காட்கி கிராமத்தைச் சேர்ந்த ஷிவானி கல்மேகர் என்ற 26 வயது இளம்பெண்ணும், அதே பகுதியைச் சேர்ந்த அருண் தாது கல்மேகர் என்ற 24 வயது இளைஞரும் கடந்த ஏப்ரல் மாதம் திடீரென மாயமாகினர். இவர்களைக் காணவில்லை என்று இவர்களது குடும்பத்தினர் இந்த மாத தொடக்கத்தில் காக்னார் போலீஸ் ஸ்டேஷனில் தனித்தனியாக மிஸ்ஸிங் (Missing) கம்ப்ளைன்ட் கொடுத்திருந்தனர். போலீசாரும், குடும்பத்தினரும் இவர்களைத் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், பக்கத்து மாநிலமான மகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில் உள்ள ஒரு அணையின் அருகே கடந்த ஏப்ரல் 26 அன்று ஒரு இளம் பெண்ணின் சடலத்தை மகாராஷ்டிரா போலீசார் மீட்டனர்.

அங்கு மீட்கப்பட்ட சடலமானது தலை துண்டிக்கப்பட்டும், அடையாளம் தெரியாத அளவுக்குப் பாதி எரிக்கப்பட்ட நிலையிலும் இருந்தது. அந்தச் சடலத்தை முழுமையாக ஆராயாமலும், டிஎன்ஏ (DNA) போன்ற எவ்வித அறிவியல் பூர்வமான சோதனைகளையும் நடத்தாமலும், அது காணாமல் போன ஷிவானியின் சடலம்தான் என்று மகாராஷ்டிரா போலீசார் அவசரமாக ஒரு முடிவுக்கு வந்தனர் ஷிவானியின் தந்தை பாபுராம் கல்மேகர் மற்றும் அவரது அண்ணன் அஜய் கல்மேகர் ஆகிய இருவரையும் கௌரவக் கொலை (Honor Killing) செய்ததாகக் கூறி, கொலை வழக்கில் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஆனால், மத்தியப் பிரதேசத்தின் காக்னார் போலீசார் நடத்திய ரகசிய விசாரணையில், காணாமல் போன ஷிவானி மற்றும் அருண் ஆகிய இருவரும் மகாராஷ்டிராவின் நாசிக் நகருக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் பாதுகாப்பாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அருண் அங்கு ஒரு சாதாரணத் தொழிலாளியாக வேலை செய்து வர, ஷிவானி அவருடன் தங்கியிருந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, போலீசார் அவர்கள் இருவரையும் பத்திரமாக மீட்டனர். ஷிவானியின் கட்டைவிரல் ரேகை, பஞ்சநாமா மற்றும் அவரது உறவினர்களின் சாட்சியங்களை வைத்து, அவர் நிஜமாகவே உயிருடன் இருக்கும் ஷிவானிதான் என்பதை மத்தியப் பிரதேச போலீசார் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தினர்.

இதனைத் தொடர்ந்து, தான் உயிருடன் இருப்பதை நிரூபிக்கவும், தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்யவும், தன்னை இறந்துவிட்டதாக அறிவித்த மகாராஷ்டிராவின் ஜல்கான்-ஜமோத் போலீஸ் ஸ்டேஷனுக்குள் வியாழக்கிழமை ஷிவானி நேரில் நடந்து வந்தார். போலீஸ் ஸ்டேஷனுக்குள் அவர் உயிருடன் நுழைந்ததைக் கண்டு அங்கிருந்த அதிகாரிகள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போயினர். "நான் உயிருடன் தான் இருக்கிறேன், எனக்கு எந்த ஆபத்தும் நேரவில்லை; தவறே செய்யாத என் தந்தையையும், அண்ணனையும் உடனடியாகச் சிறையிலிருந்து விடுதலை செய்ய வேண்டும்" என்று ஷிவானி போலீசாரிடம் கண்ணீருடன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

டிஎன்ஏ டெஸ்ட் கூட எடுக்காமல், ஒரு முகம் தெரியாத சடலத்தைக் காட்டி அப்பாவிக் குடும்பத்தினரைக் கொலைக் குற்றவாளிகளாகச் சித்தரித்துக் கைது செய்த மகாராஷ்டிரா காவல் துறையின் செயல்பாட்டிற்கு எதிராகப் பொதுமக்கள் கடுமையான கண்டனங்களையும், தங்களின் ஆத்திரத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர். ஷிவானி உயிருடன் இருக்கும் தகவல் புதன்கிழமையே மகாராஷ்டிரா போலீசாருக்குத் தெரிவிக்கப்பட்டதாகவும், தற்போது ஷிவானி நேரில் வந்து வாக்குமூலம் அளித்துள்ளதால், சிறையில் இருக்கும் அவரது தந்தை மற்றும் அண்ணனை சட்டப்படி விடுவிப்பதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் தீவிரமாக எடுத்து வருவதாகவும் ஜல்கான்-ஜமோத் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் நிதின் பாட்டீல் தெரிவித்துள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com